சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, March 20th, 2018

மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை  இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம்; எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, மருதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் என்பவரது மனைவி, கணவனின் பிரிவுத் துயரங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் 3 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டு, மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த சுதாகரின் 10 வயது பெண் குழந்தை தாயும் அற்ற நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபமும் எமது மண்ணில் நடந்தேறியிருக்கின்றது.

அதுமட்டுமன்றி புலிகள் இயக்கத்திற்கு வாகனங்களைப் பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்து 70 வயதுடைய சண்முகநாதன் தேவகன் என்ற முதியவரது வழக்கு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, கடந்த வருடம் இவருக்கு 2 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் இவர்மீது இன்னுமொரு வழக்கினை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நோய்வாய்ப் பட்டிருந்த இவர் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கடந்த 16ஆம் திகதி உயிரிழந்த பரிதாபச் சம்பவ சம்பவமும் நடந்துள்ளது.

இந்த நிலையில் 2 பேர் 22 வருடங்களாகவும், 3 பேர் 18 வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு சிலரது வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இவர்களது வழக்குகள் நடைபெறாதததன் காரணமாக அடுத்த கட்டமாக தங்களுக்கு என்ன நடக்கும் என்பது புரியாமலேயே தாங்கள் நிலை குழம்பிப் போயுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இடம்பெறுகின்ற பல்வேறு கெடுபிடிகள், சித்திரவதைகள் காரணமாக உள மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அக் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தங்களது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, முடிவுகள் ஏதேனும் வருமா? அல்லது நீதிமன்ற விசாரணைகள் இன்றிய நிலையில் எதுவுமே அறியக் கிடைக்காமல், வாழ் நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க நேரிடுமா? என்ற திக்கற்ற நிலையில் இந்த தமிழ் அரசியல் கைதிகள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்கைதிகளின் பிரச்சினை தொடர்பில் விரைந்த சாதகமான ஏற்பாடுகள் தேவை என்பதையே நான் மீண்டும், மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் ...
நாட்டின் மின்வலு உற்பத்தி தொடர்பில் பொறிமுறையினை உருவாக்க இப்போதாவது முன்வாருங்கள் - நாடாளுமன்றில் ...
புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...