‘வீடு’ காட்டி எமது மக்களை ஏமாற்றாதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Wednesday, August 8th, 2018

தேர்தல் காலங்களில் ‘வீடு’ காட்டி, எமது மக்களை ஏமாற்றி, எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வோர், எமது மக்களுக்கென வீடுகளைக் கட்டிக் கொடுப்போர்களாக இல்லை. மத்திய அரசிடமிருந்து வீட்டுத் திட்டங்கள் வருகின்ற நிலையில், அவற்றையும் காலங்கடத்துவதையே தங்களது கடமை எனக் கருதிக் கொண்டிருக்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதிம் நடைபெற்ற இணை மனை சொத்தாண்மை விசேட ஏற்பாடு  சட்டமூலம்  நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாட்டில் வீடமைப்பு துறை சார்ந்து பல அமைச்சுக்கள் செயற்பட்டு வருகின்றன. இதில், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் வீடமைப்பு கடன் தொகை தொடர்பில் நான் தனியாகவே கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றேன். அதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாது தென் பகுதியில்கூட தற்போதைய பொருளாதார நிலையில், மேற்படி கடன் தொகையானது வீடமைப்பு செயற்பாட்டுக்கு போதாத நிலைமையே காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் சாதகமாக பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இதேபோன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் கல் வீடுகள் கட்டப்படப் போவதாகக் கூறப்பட்டு, அந்த விடயமும் இன்னமும் இழுபறி நிலையிலேயே இருப்பதாகத் தெரிய வருகின்றது.

எமது மக்கள் மழை காலங்களில் நனைபவர்களாகவும், வெய்யில் காலங்களில் காய்பவர்களாகவும், வீடுகள் வேண்டி தவம் கிடக்கின்றனர். வாக்குக்கு மட்டுமே வீடு, வாழ்க்கைக்கு அல்ல என்ற போக்கில் சுயலாப அரசியல் நடத்துகின்றவர்களால் எமது மக்களின் உரிமைப் பிரச்சினை போன்றே, உறைவிடப் பிரச்சினையும் காலங்கடத்தப்பட்டே வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டப்படுகின்ற வீடுகளின் தரம் தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்படுவதாகத் தெரிய வரவில்லை. குறிப்பாக, யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கபுரம் வீடமைப்புத் திட்ட வீடுகளில் இரண்டு வருடங்கள் கழியும் முன்னராகவே தற்போது வெடிப்புகள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

Related posts:

யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு - அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்...
யாழ்ப்பாணம் பிரதேச கடற்பரப்புகளில் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களது இடர்பாடுகளுக்...