கச்சதீவு ஒப்பந்தத்தால் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை இந்தியாவுக்கு தாரைவார்த்துள்ளோம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023

1974ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்ட நாங்கள் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை தாரைவார்த்துள்ளோம்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலான நாடாளுடன்றில்  நடைபெறும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

1974 ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 7 சரத்துக்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் 5 ஆவது சரத்தில், இந்திய கடற்றொழிலாளர்களும், இந்திய யாத்ரீகர்களும் கச்சதீவை அனுபவிக்கலாம், மற்றும் இந்த விடயங்களுக்கு “சிறி லங்காவுக்கு” விசாவோ பயண ஆவணமோ பெறப்பட வேண்டியதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்  1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 6வது சரத்தில்,“ சிறிலங்;கா” மற்றும் இந்திய கடற்றொழில் படகுகள் தாங்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமையை அனுபவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர், 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கும், இந்தியாவுக்குமான கடல் எல்லைகளையும், கடல் உரிமைகளையும் வரையறுத்துக் கொள்கின்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தம் கைசாத்திடப்படுவதற்கு முன்னர்; இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பது போன்று, இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள் சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே “வெட்ஜ் பாங்” என்ற மீன்வளம் பெருகிய கடற்பரப்பில் 1922 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான மீன்பிடி நிறுவனம் 06 பாரிய மீன்பிடி கப்பல்களைக் கொண்டு மீன்பிடித்து வந்துள்ளது. அதைவிட நூற்றுக்கணக்கான இலங்கை மீன்பிடிப் படகுகள் இந்திய கடற்பரப்பினுள் சென்று மீன்பிடித்து வந்துள்ளன. இந்த நடவடிக்கை 1975ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

எனினும், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், இப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு 3 வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. அதுவும் இலங்கையின் 06 மீன்பிடி கப்பல்களிற்கு மட்டுமே அதாவது – மேற்படி 6 கடற்றொழில் கப்பல்களும் இந்தியஅரசாங்கத்தால் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டே கடற்றொழிலில் ஈடுபட இயலுமென தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் 1979ஆம் ஆண்டு வரை தொடர்ந்தன.

அதன் பின்னர் 1980 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டிருந்த மீன்களுக்கான பற்றாக்குறை காரணமாக இந்திய அரசு வருடத்திற்கு 2,000 தொன் மீன்களை இரு அரசுகளும் இணங்குகின்ற வகையில் வழங்க முன்வந்திருந்தது. அதன் பின்னர் எவ்விதமான செயற்பாடுகளும் இல்லை.

ஆரம்பத்தில், இந்திய கடற்றொழிலார்கள் தங்களது வலைகளை பழுதுபார்ப்பதற்கும், உலர்த்துவதற்கும், மீன்களை காயவைத்து உப்பிடுவதற்கும் என கச்சதீவை பயன்படுத்தி வந்தனர். அக்கால கட்டத்தில் பருத்தி நூல் சார்ந்த வலைகள் பயன்படுத்தப்பட்டதால் அவை நீரில் பட்டவுடன் ஊறி விடும் என்பதால் இப்படியொரு நிலை இருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. தற்போது நைலோன் வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்குறிப்பிட்டபட்ட “வெட்ஜ் பாங்” பகுதியில் இலங்கை கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. அத்துடன் அந்தந்த நாடுகளின் கடற்பரப்புகளுக்குள் அந்தந்த நாடுகளின் கடற்றொழிலாளர்களே கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும், எல்லைகள் தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவது தடை எனவும் குறிப்பிடப்பட்டது.

தற்போது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுமான கடற்றொழிலாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் மேற்படி (வெட்ஜ் பாங்) பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிய வருகின்றது.

இத்தகைய நிலையில்தான் பாண்டிச்சேரி,காரைக்கால், நாகப்பட்டிணம், இராமேஸ்வரம், போன்ற மாவட்டங்களைச் சாரந்த 5,000க்கும் அதிகமான இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற் பரப்பிற்குள் அத்துமீறி, எல்லைத்தாண்டி வந்து தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டு கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

1976ஆம் ஆண்டின் இரு நாடுகளிற்கு இடையிலான ஒப்பந்தத்தின் பின்னர் சுமார் 36 அடி நீளமும் 120 குதிரை வலுச் சக்தி கொண்டதுமான இந்திய இழுவை வலை மடிப் படகுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 50 – 60அடி நீளமும், 350 முதல் 550 வரையிலான குதிரை வலுச் சக்தி கொண்டவையாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

1974ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்ட நாங்கள் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சதீவைப் போல் 80 மடங்கு வளம் கொண்ட“வெட்ஜ் பாங்” பகுதியை தாரைவார்த்துள்ளோம்.

அத்துமீறி எல்லைத்தாண்டியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், எமது கடற்றொழிலார்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் நாங்கள் இராஜதந்திர முறையிலும், சட்ட நடவடிக்கைகள் மூலமும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் ஊடாகவும் ஊடுறுவல், அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அண்மையிலே எமது ஜனாதிபதி அவர்கள் புதுடில்லி செல்லவுள்ளார் அப்போது இவ்விடயம் தொடர்பில் இந்திய அரசுக்கு எடுத்துரைப்பார் என நம்புகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் அகழ்வுப் பணிகள் ...
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை - ஆனால் மக்களுக்கு யதார்த்தமா...