வவுனியா விஞ்ஞானன் குளம் மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019

வவுனியா வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட விஞ்ஞானன் குளம் பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது வவுனியா வடக்கு விஞ்ஞானன் குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்துவரும் 190 குடும்பங்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்றுபார்வையிட்டார்.

இதன்போது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் –

எமது பகுதி மக்கள் பல்வேறு புறக்கணிப்புகள் காரணமாக பல அபிவிருத்திகளை இழந்துள்ளனர். ஆனால் எமது பிரதேசத்தில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகள் முதற்கொண்டு குறிப்பாக வீடமைப்பு, வீதி புனரமைப்பு, மின்சாரம், மலசலகூடம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாது காணப்படுகின்றன. ஆனாலும் இதுவரை அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர இங்குள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட எவரும் முன்வரவில்லை.

ஆனால் தற்போது மக்களுக்கு பாரபட்சமற்று சேவையாற்றும் தாங்கள் எமது பகுதிக்கு வருகைதந்துள்ளதால் எம்மிடம் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. அதனடிப்படையிலேயே எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு தங்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம் என தெரிவித்தனர்.

மக்களது கோரிக்கைகளை கருத்திற் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  எதுவித பாரபட்சங்களோ முறைகேடுகளோ இடம்பெறாதவகையில் மக்களுக்கான சேவையைச் செய்ய நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம்.

ஆனாலும் அதை நாம் வலிமையுடன் முன்கொண்டு செல்ல எமக்கான அரசியல் பலம் போதியளவாக காணப்படவில்லை. இதனால் மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை எம்மால் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. நாம் கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்த அரசியல் அதிகாரங்களைக் கொண்டு பல்வேறுபட்ட மக்கள் நலத்திட்டங்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு சாதித்துக் காட்டியுள்ளோம்.

அந்தவகையில் உங்களது பிரச்சினைகள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்பட்டு துறைசார் அமைப்பினருடன் கலந்துரையாடி விரைவாகத் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், வருகின்ற காலத்தில் எமது கரங்களுக்கு அரசியல் பலத்தை மக்கள் வழங்குவார்களாயின் எமது மக்கள் தற்போது வாழ்ந்துவரும் அவல நிலையிலிருந்து அவர்களை மீட்டு அவர்களது வாழ்வியலை அபிவிருத்தியால் கட்டி எழுப்புவதுடன் எமது இனத்தின் அரசியல் அபிலாஷைகளையும் வெற்றிகண்டுதர எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
நாம் குற்றவாளி அல்ல சுற்றவாளி என்பதை நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்துள்ளது - யாழில் ஊடகவியலாளர் மத்திய...
வன்னி மக்கள் ஓரளவேனும் நம்பிக்கைக்கு உரியவர்களை இனங்கண்டுள்ளனர் – ஓர்ஆசனத்தை வைத்தே வன்னி மக்களின் த...