வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தது!

Saturday, December 3rd, 2016

யாழ் குடாநாடு உட்பட வடக்கில் நீர்வள மூலங்களை உரிய முறையில் இனங்காணவும், அவ்வாறு இனங்காணப்படுகின்ற இடங்களிலிருந்து குடி நீரைப் பெற்று, அவற்றை குடி நீருக்கான தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு விநியோகிக்கக்கூடிய முறைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்வரவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், குடி நீருக்கான பற்றாக்குறை நிலவுவது தொடர்பில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கறிவார்கள் என்பதை நான் அறிவேன். எமது மக்களின் தேவைகள் தொடர்பில் உணர்வு பூர்வமாக அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதில் அவர் அதிக அக்கறையும், ஆற்றல்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறார். அந்த வகையில், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்தக் குடி நீருக்கான பற்றாக்குறை  இரணைமடு – யாழ்ப்பாணம் நீர்வழங்கல் திட்டம் பூர்த்தியாகும்போது ஓரளவு நீங்கும் என எதிர்பார்க்க முடியும். அது வரையில் இங்கு நிலவக் கூடிய குடி நீர்ப் பிரச்சினை தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்தி, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், யாழ் குடாநாடு உட்பட வடக்கில் நீர்வள மூலங்களை உரிய முறையில் இனங்காணவும், அவ்வாறு இனங்காணப்படுகின்ற இடங்களிலிருந்து குடி நீரைப் பெற்று, அவற்றை குடி நீருக்கான தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு விநியோகிக்கக்கூடிய முறைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்வர வேண்டும் எனவும்,

குறிப்பாக, பொருத்தமான இடங்களில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள், மழை நீர் சேகரிப்புத் திட்டம், யாழ்ப்பாண ஆற்றுத் திட்டம், 1,000 குளங்கள் புனரமைப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,

அதே நேரம் நிலத்தடி நீர் மாசடைவதற்குரிய காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தடுப்பதன் ஊடாகவும், அவை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாகவும் போதியளவு குடிநீரை வடக்கு மாகாணத்தில் பெற முடியும் என்பதால், இந்த அமைச்சின் மூலமாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடிந்தால் அது எமது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பரந்தன், ஆனையிறவு, பாரதிபுரம், மலையாளபுரம், பூநகரி போன்ற பகுதிகளில் குடி நீருக்கான பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில், தற்போது சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், முன்னெடுப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டும் உள்ள நிலையில் அவற்றைத் துரிதப்படுத்துவதற்கும், மேலும் போதிய திட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் அவர்களின் அவதானத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.

அதே நேரம் கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் குடி நீருக்கான பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில், கம்பஹா தம்மிட்ட கிராமத்தில் குடி நீரின்றி சுமார் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. இந்தக் கிராமத்திலிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மாக்கிலங்கமுவ சந்திக்கு நீர் வழங்கல் வடிகாலமைபுச் சபையின் மூலம் குழாய் மூலமாக நீர் வழங்கப்படுகின்ற நிலையிலேயே தம்மிட்ட கிராம மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

2003ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த பாலிந்தநுவர பகுதி மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்திலுள்ள ரன்சிறிகம பகுதியில் குடி நீருக்கான கிணற்றில் கறள் காரணமாக அந்த மக்கள் பல வருட காலமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்த பகுதியில் சுமார் 50 ஆயிரம் மக்கள் குடி நீருக்கான பற்றாக்குறைக்கு ஆளாகியுள்ளனர்.

பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொல்லுன்ன மற்றும் படஹேன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொல்லுன்ன நீர் வழங்கல் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப் பகுதிகளைச் சேர்ந்த  சுமார் 110 குடும்பங்கள் குடி நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன.

பேருவளை மர்சலின் ஜயகொடி சுனாமி கிராமத்தில் வசித்து வருகின்ற சுமார் 27 குடும்பங்கள் கடந்த 10 வருடமாக குடிநீர் வசதியின்றி அவதியடைந்து வருகின்றனர். நீர்கொழும்பை அண்மித்த கட்டான பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கென 2014ம் வருடம் டிசம்பர் மாதம் 4ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததால் அப்பகுதி மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் குடி நீருக்கான பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவை தொடர்பில் உரிய அவதானமெடுத்து, அத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.

1314195337B2

Related posts:

எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ...
ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்து ஏற்றுமதியை அதிகரிக்க விரிவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரி...
பகிரங்க விவாதத்துக்குப் அச்சமின்றி வாருங்கள் - தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுத்துள்ளார் அ...