மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 16th, 2017
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் எமக்குக் கிடைத்துள்ள மாகாண சபை முறைமையானது, வடக்கைப் பொறுத்தவரையில் முயலாமை – இயலாமை போன்ற காரணங்களாலும்,  அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல், மோசடிகள் காரணமாகவும் மக்கள் பணிக்குரிய செயற்றிறன் இன்மையாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற பலருக்கு மாகாண சபை உறுப்புரிமை வானத்திலிருந்து வந்தததைப் போன்று கிடைத்திருப்பதால் அதனது பெறுமதியை அவர்கள் உணர இயலாதவர்களாக உள்ளதாலேயே அதன் மூலமான எமது மக்களுக்கான பணிகள் முடக்கப்பட்டுள்ளன. எமது பாரிய அர்ப்பணிப்புகள், உயிர்த் தியாகங்கள், இழப்புகள் ஊடான தொடர் மக்கள் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமையானது இன்று, அந்தப் போராட்டங்களையே கொச்சைப் படுத்துகின்ற அளவுக்கு வடக்கில் கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கு மாகாண சபையின் செயற்றிறன் இன்மையை அவதானத்தில் கொண்டு, மாகாண சபை முறைமை குறித்து எவரும் குறை மதிப்பீடு செய்யக் கூடாது. தற்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்து செயற்படுத்தினால்கூட எமது மக்களுக்கு மாகாண சபையூடாக பல்வேறு பணிகளை ஆற்ற முடியும். எனினும், தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அந்த வகையில் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாகவும், நடைமுறை ரீதியாகவும் பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமான அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென்றும், அத்துடன் மேலும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
கடந்த ஆட்சியின்போது மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக நாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது கையொப்பங்களை வாங்கியும், விவாதிட்டும் அந்த ஏற்பாடுகளைத் தடுத்திருந்தோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு – பறிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளையும் நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அதற்கு ஒரு போதும் சிறுபான்மைக் கட்சிகள் துணை போகக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது அரசியல் உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதிய அரசியலாப்போ, அரசியலாப்பு சீர்திருத்தமோ கொண்டு வரப்பட்டு, அது 13வது சீர்திருத்தத்தைவிட மேம்பாடாக இருப்பின் அதனை நாம் வரவேற்போம். அவ்வாறு ஒரு புதிய எற்பாடு தாமதமாகுமானால், எமது அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு கருதிய ஓர் ஆரம்ப நடவடிக்கையாக 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்குமாறும், அதற்கான அதிகாரங்களை அதிகரித்து பகருமாறுமே நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: