வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் முறைமையினாலும், பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த விடயம் தொடர்பில் நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நேற்றும்கூட யாழ்ப்பாணத்திலே மூன்று இந்திய இழுவை மடி வலைப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இரு படகுகள் பிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறை சார்ந்த அமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன்  கதைத்து வருகின்றனர்.

அதேபோல் இம் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றர். முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது. அவர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் மூலமான பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது. எனவே, பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இதேநேரம் வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன். அவர்களது போராட்டங்களை நான் விளங்கிக் கொள்கின்றேன். அவர்களது போராட்டங்கள் சிறந்த பயன்களைத் தந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். தற்போதே அவர்களது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது. எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு நான் அவர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் ட...
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வு கிட்டும் - பல்கலைக்கழக நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத உழியர்களிடம...