மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017

நாட்டு மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும். இதில் தவறு எங்கே நிகழுகின்றது? என்பதை ஆராய்ந்து, அதற்குரிய பரிகாரம் காணப்படாவிட்டால், நிலைமை மேலும் மிகவும் மோசமானதாகவே தொடரும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் , சேர் பெறுமதி வரி, உற்பத்திகள் வரி மற்றும் காணி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டைப் பொறுத்தவரையில், பல்வேறு முறைமைகளில் சுமார் 26 வரிகளை அரசு விதித்து வருகின்ற நிலையில், இவ் வரிகள் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் எவராயினும், இதன் அடிப்படை சுமை பொது மக்களின் மீதே சுமத்தப்படுகிறது.

ஒழுக்கப் பண்பாடுகளுடன்கூடிய ஒரு சமூகத்தில் வாழ்ந்து வருகின்றவர்கள்,  அவர்கள் வாழுகின்ற நாட்டில் வரிகளைச் செலுத்துவதிலிருந்து விலகியிருக்க முடியாது. வரி என்பது அனைவரும் செலுத்தப்பட கடமைப்பட்ட ஒரு விடயமாகவே ஆக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏனைய எவரும் செய்யாத, எனினும் அரசு செய்கின்ற சேவைகள் பலவற்றுக்காகவே இந்த வரியை பொது மக்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான சேவைகளுக்கென ஒவ்வொரு  நபர்களிடமிருந்தும் நேரடி விலைகளை அறவிடவும் இயலாது. எனவே, இந்த வரிகளை அறவிட்டுக் கொள்வதன் மூலம், ஒழுக்கப் பண்பாடுகளுடன்கூடிய சமூகத்தில் அனைத்து நபர்களும் வாழக்கூடிய வகையில், அதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்துவதற்கான பொதுப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் அபிவிருத்திகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், சட்டத்தையும், ஒழுங்கையும் உருவாக்குதல், அத்தியாவசிய சேவைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகள் இதற்கு உட்படுகின்றன. இவை, பொதுவாக ஒரு சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகின்ற சேவைகளாகும். அந்த வகையில், அனைத்து மக்களிடமும் ஒரு பொதுவான தொகையை அறவிடலானது வரி எனக் கொள்ளப்படுகின்றது. எனினும், இதன் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் ஒழுங்குற வழங்கப்படுகின்றனவா? என்பது தொடர்பில் நாம் தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உலகின் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளைப் பொறுத்தவரையில் அனைத்து நபர்களும் வரி செலுத்துகின்றனர். என்றாலும், எமது நாட்டைப் பொறுத்த வரையில் வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதிலேயே பலரும் குறியாக இருந்துவரும் நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அவதானத்துக்குரிய ஒரு விடயமாகும். அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளில் இவ்வாறு வரி செலுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்வதென்பது இலகுவான விடயமல்ல. அந்தந்த நாடுகளில் வாழுகின்ற, ஒவ்வொரு நபரும் பெறுகின்ற, அனைத்து வருமானங்கள், அவர்களது சொத்துக்கள் என்பன அவர்களது பெயர் விலாசங்களுடன் கணினிமயப் படுத்தப்பட்டுள்ளதால், அந்த நபர்களால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரித் தொகையும் அதிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், அந்த முறைமை எமது நாட்டில் இல்லை.

இவ்வாறான முறைமை இங்கு ஒழுங்குற செயற்படுத்தப்படுமானால், இந்த நாட்டில் வரிகளின் சுமையை சாதாரண மக்கள் மாத்திரம் சுமக்கின்ற நிலை ஏற்படாது என்பதை நான் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். எனினும், துரதிஸ்டவசமாக அந்த நிலையை நாம் எட்டவில்லை. இன்றும் கூட நபர்களைப் பார்த்து வரி அறவிடப்படுகின்ற ஒரு நிலையினைக் கொண்ட சூழலில்தான் நாம் வாழந்து வருகின்றோம். அந்த வகையில், நாட்டில் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற போதிலும், ஒரு சிறு தொகையினர் மாத்திரமே அதனைச் செலுத்துகின்ற நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு செலுத்றுகின்ற சிறு தொகையினர்கூட அதிகளவில் வரி செலுத்துவது கிடையாது. அதே நேரம் அரசு பொருட்களின் மூலமான மறைமுக வரியையே அதிகமாக அறவிடுகின்றது. இந்த முறைமை இலகுவானது, ஆனால், அந்தளவுக்கு இது நியாயமான தொரு முறையாக இல்லை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்த நிலையில், அண்மைக் காலத்தில் பெறுமதி சேர் வரியினை அதிகரித்தமை மற்றும் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் வரி விதித்தமை போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாட்டில் பல்வேறு எதிர்ப்பு நிலைகள் தோற்றம் பெற்றன.

அரசைப் பொறுத்தமட்டில், வெளிநாடுகளிருந்து பெறப்பட்டுள்ள கடன் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. இது காலகாலமாக நீடித்துள்ள பிரச்சினையாகும். இந்தக் கடன்களை இந்த வரிகளின் மூலமே செலுத்தவும் வேண்டியுள்ளது. எனினும், மக்களிடமிருந்து அறவிடப்படுகின்ற முழுமையான வரிகளின் மூலமாகப் பெறப்படுகின்ற தொகையானது, அரசு பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன்களின் தவணைகளையும், வட்டியையும் செலுத்தக்கூடப் போதுமானதாக இல்லாத நிலையும் காணப்படுகின்றது. ஆனால், இந்தக் கடன்களைச் செலுத்தவதற்காக மாத்திரம் பொது மக்கள் வரி செலுத்தவில்லை என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கான சேவைகள் அரசால் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு நிலைமை மிக மோசமாக அமைந்திருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. அதாவது, மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும்.

இதில் தவறு எங்கே நிகழுகின்றது? என்பதை ஆராய்ந்து, அதற்குரிய பரிகாரம் காணப்படாவிட்டால், நிலைமை மேலும் மிகவும் மோசமானதாகவே தொடரும் என மேலும் தெரிவித்தார்.

1123

Related posts:

நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...
தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது - அமைச்சர் டக்ளஸ் ...
ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது - நாடாளுமன்றில் டக்ளஸ...
தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு - இந்தியாவின் அனுசரனையை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தே...
அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் - வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார...