சுற்றுலாத் தளமாகிறது கிளிநொச்சி குளம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 4th, 2021

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டமிடல் ஒன்று இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரனால் இன்று புதன்கிழமை குறித்த குளத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பொழுதுபோக்கு மையத்தில் நடை பயிற்சிக்கான வலையம், சிறுவர் பூங்கா,  நீரில் பயணிக்கும் வகையிலான வசதி, பொழுதுபோக்கு வசதிகள், மின்னொளியூட்டல், வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குளத்தைச் சூழவுள்ள பகுதி அணைக்கட்டாக்கப்பட்டு, அதில் நடை பயிற்சிக்கான வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளடக்கிய முதல் கட்ட பணிகளிற்கு 11 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் நடைபயிற்சிக்கான பொருத்தமான இடங்கள் இல்லாத நிலையில் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களுக்கு அது பெரும் நன்மையளிக்கும் எனவும் மாவட்ட புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த திட்டமிடல் தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் தவநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும் –...
மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அ...
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!