யுத்தத்தால் இறந்த உறவுகளை நினைவுகூர பொது தூபி அமைப்பது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரத்தக்க வகையில் பொது நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டுமென நான் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தேன். எனது இந்த கோரிக்கைக்கு அமைவாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் கடந்த 08ம் திகதி நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியிருந்தார். அந்த வகையில் இந்த நிலைப்பாட்டை வருவேற்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள் கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளை நினைவுக்கூர ஏதுவான வகையில் ஓமந்தைப் பகுதியில் வசதியான ஓரிடத்தில் பொது நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். இதனை முன்வைத்தே நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தேன். அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் குரலெழுப்பியுள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.
எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் எமது மக்களின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குரல் கொடுத்தும், செயற்பட்டும் வருகின்ற எமக்கு சார்பாக, இவ்வாறான பெரும்பான்னையினக் கட்சிகளின் குரல்களும் ஒலிப்பதானது, இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேலும் இலகுபடுத்தும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|