முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, March 12th, 2016

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்  தடுப்பில் இருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் இழுத்தடிப்புகள் இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் அரசு தடையேதும் விதித்துள்ளதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், முன்னாள் போராளிகளான இவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  தடுப்பின் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள். தற்போது இவர்களில் பலர் தொழில் வாய்ப்புகளின்றிய நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் ஏதேனும் தனியார்த்துறை தொழில்களையேனும் பெற்றுக் கொள்ள முனையும்போதும், உதவிகளைப் பெற முனையும் போதும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலை பொதுவாக அனைத்து நபர்கள் தொடர்பிலும் நடைமுறையில் இருந்தே வருகிறது.

இவ்வாறான நிலையில் இவர்கள தேசிய அடையாள அட்டைகள் பெற செல்லுமிடத்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சில அதிகாரிகள் அதற்குத் தடையாக இருந்துவருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதில் குறிப்பிட்ட அதிகாரிகள் ஏதேனும் தடைகளுக்கு முகங்கொடுக்கிறார்களா? என ஆராய்ந்து பார்க்குமிடத்தே அப்படியேதும் தடைகள் இல்லை என்றே தெரியவருகிறது. அப்படி எனில் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடிக்காமல், அவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மோதலுக்காக போராடவும் தீர்வுக்காக உழைக்கவும் த.தே. கூட்டமைப்பு தயாரில்லை - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிக...