மோதலுக்காக போராடவும் தீர்வுக்காக உழைக்கவும் த.தே. கூட்டமைப்பு தயாரில்லை – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் தமது சுயலாப நலன்களுக்காக தவறவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று மோதலா? தீர்வா? என்று வெற்றுக்கோ~ம் போடுகின்றார்கள். மோதலுக்காக போராடவோ, தீர்வுக்காக உழைக்கவோ அவர்கள் தயாரில்லை என்றும்,  அதுவே அவர்களின் வரலாறுமாகும்  என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தும் அரசியல் பலம் கூட்டமைப்பிடம் இருந்தாலும், துரதிஷ்டவசமாக கூட்டமைப்பின் தலைமையிடம், தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் உறுதியில்லை. தவிரவும் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையேயும் ஒருமித்த பொது உடன்பாடில்லை.

அரசியல் செல்வாக்குச் சரிவிலும், சுயநலனிலும் மூழ்கிக் கிடக்கும் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வையும், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தீர்வையும் பெற்றுக்கொடுக்க முடியாது.

ஐ.நா அறிக்கைக்கு இணை அணுசரனை வழங்குவதில் முரண்பட்டு நின்ற பிரதமரையும், ஜனாதிபதியையும் ஒரே சந்திப்பில் சமரசம் செய்து வைத்ததாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவோ, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு நிற்கும் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளவோ தென் இலங்கைத் தலைமைகளுடன் கலந்துரையாடி அவர்களை ஒரு இணக்கத்திற்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை என்பதே எமது மக்களின் கேள்வியாக இருக்கின்றது.

ஐ.நா தீர்மான விடயத்தில்  இருதரப்பையும் சமரசப்படுத்திவிட்டு அவர்களின் குழுவோடு சேராமல் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தனியாக ஜெனீவா செல்லவிருக்கின்றனர் எனவும் கூறுகின்றார்கள் .ஏன் இந்த இரட்டைப்போக்கு? அவர்களை சமரசம் செய்ததோடு அரசின் பங்காளியான கூட்டமைப்பும் அந்தக் குழுவில் ஒரு பிரதிநிதித்துவமாகச் சென்று அங்கே தமிழ் மக்கள் சார்பான கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து ஜெனிவாவுக்குச் செல்கின்றோம், அங்கே தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறுவார்கள். அரச பிரதிநிதிகளோடு போய் இருந்தால் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதான சபையில் பிரசன்னமாகி தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைக்கலாம். அவ்வாறு இல்லாமல் தனித்தனியாக தமது அரசியல் பிரசாரங்களுக்காக ஜெனிவாவுக்குச் செல்லும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளோ பிரதான சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாமல், உப குழு அமர்வுகளில் கலந்து கொண்டு பொழுது போக்குவதிலும், கொக்கரிப்பதிலும் தமிழ் மக்களுக்கு பலன் ஏதுமில்லை.

கொழும்பில் தமக்கு சொகுசு மாளிகை மற்றும் சொகுசு வாகனங்கள் அதற்கான பராமரிப்பு செலவுகள் என்பவற்றுக்காக அரசை வற்புறுத்தி விஷேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கச் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாமே ஆட்சிபீடமேற்றியதாகக் கூறும் இந்த ஆட்சியாளர்கள் ஊடாக இதுவரை தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைக்காகவோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்காகவோ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவோ, மாகாணசபையின் அதிகாரப் பிரயோகம் தொடர்பாகவோ இதுவரை எந்தவொரு விஷேட அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவோ, தீர்வுகளைக் காணவோ முன்வரவில்லை என்பதே இவர்களின் கபடத்தனமான அரசியலுக்கு பெருஞ்சான்றாக இருக்கின்றது என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் - ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் ...
புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
வைத்தியர்கள் இடமாற்றம் தொடர்பில் வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியான பட்டியல் முறைய...