நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி. அஞ்சலி மரியாதை!

Wednesday, August 8th, 2018

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர், கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செலுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற இணை மனை சொத்தாண்மை விசேட ஏற்பாடு  சட்டமூலம்  நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளுக்காக நாம் அன்று  ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஆனாலும், மாறிவந்த யதார்த்த அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தீர்க்கதரிசனமாக ஏற்றுக்கொண்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் நாம் இணைந்து கொண்டவர்கள்.

ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளை மத்திய அரசுடன்  நாம் பேசி, தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்ற பாடங்களை பல்வேறு நாட்டு அனுபவங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொண்டவர்கள்.

இந்திய மத்திய அரசின் உறவுக்கு கரம் கொடுத்து, தமிழக மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து, மாநில சுயாட்சியை அங்கு உருவாக்கிய அனுபவங்களையும் நாம் பெற்றுக்கொண்டவர்கள்.

தமிழக மக்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு தமிழுக்கும், தமிழ் கூறும் உலகிற்கும் பெரும்பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.

எண்பத்தி மூன்று ஆடியில் நடந்த இன வன்முறையின் ஞாபக நிகழ்வுகள் இங்கு நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அன்று எமது மக்கள் தஞ்சம் தேடி தமிழகம் சென்ற போது  மடி விரித்து எமது மக்களுக்கு உறங்க இடம் கொடுத்த தமிழக மக்களை நான் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த தமிழக மக்களின் திராவிடச் சூரியன் கலைஞர் கருணாநிதி அவர்களை இழந்து தவிக்கும் மக்களின் உணர்வுகளில் நாமும் பங்கேற்கின்றோம்.

எமது உரிமைப்போராட்ட இயக்கங்களிடையே ஒற்றுமையின் பலத்தை உருவாக்க துணை நின்ற கலைஞர் அவர்களை நான் இந்த இடத்தில் நன்றியுடன்  நினைவு கூறுகின்றேன்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! எம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு!…

இதை உணராமல் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் முட்டி மோதி முரண்பட்டு நின்ற வேளையில், உட்பகை வேரறுக்கும் என்று தீர்க்க தரிசனமாக எமக்கு தத்துவ விளக்கம் தந்த கலைஞர்  அவர்களை நான் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு உரிமைக்காக போராடிய போது புளகாங்கிதம் அடைந்த கலைஞர் அவர்கள். ஒரு தாய் பெற்ற பிள்ளைகளான நாம் எமக்குள் நாமே சகோதர சண்டையில் ஈடுபட்ட போது, எமது உரிமைப்போராட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதா? இல்லையா? என்பதில் கலைஞர் அவர்கள் எடுத்த முடிவுகளை நான் இன்று  நினைத்துப்பார்க்கின்றேன்.

ஆனாலும், இந்திய மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக தொடர்ந்தும் ஈழத்தமிழ் பேசும் மக்களுக்காக குரல் எழுப்பி வந்தவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.

கலைஞர் அவர்களுக்கு நான் இந்த சபையில் அஞ்சலி மரியாதை செலுத்துவது அவரது அரசியல் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்காகவே என்பதை நான் இந்த சபையில் கூறிவைக்க விரும்புகிறேம்.

இந்திய மத்திய அரசில் தமிழ் மொழிக்கு உரிமை எடுத்து கொடுத்தது மட்டுமன்றி, உலக மொழிகளில் பாரம்பரிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர் கலைஞர் அவர்களே.

உலகப்பொது மறையான திருக்குறளுக்கு விளக்கவுரை தந்தது முதற்கொண்டு தொல்காப்பிய  பூங்காவை எளிய நடையில் தமிழ் மக்களுக்கு தந்தவர் கலைஞர் அவர்கள்.

கலை, இலக்கியம், நாடகம், சினிமா என தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு காலத்தால் அழியாத அளப்பரிய பங்காற்றிய கலைஞர் அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக எனது அஞ்சலி மரியாதையை நான் செலுத்துகிறேன்.

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்ற வகையில் ஒரு மருத்துவிச்சியின் துணையாகவே யாரும் எமக்கு உதவ முன் வருவார்கள். எமது மக்களின் விடியலுக்கு நாமே தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் -  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
சர்வதேசத்துடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியே இலங்கையின் இலக்குமியன்மார் சுதந்த...
உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய பூரண ஒத்துழைப்பு – ரின் மீனின் சில்லறை விலையும் நிர்ணயம்...