பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணைந்து விரைவில் தீர்த்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022

கற்பக தருவான பனை சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணைந்து தீர்த்து வைக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்திற்கான கட்டிடத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

40 வருடங்களுக்கு பின்னர் பனை அபிவிருத்தி சபைக்கு வாடகை இல்லாத ஒரு சொந்தமான நிரந்தர கட்டடம் இன்று கிடைத்துள்ளது. அதற்காக துறைசார் அமைச்ருக்கு எமது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் இந்த பனை சார் அபிவிருத்தியில் பொதுமக்களாகிய உங்களது பங்களிப்புகளும் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும். 

இதேநேரம் இந்த சபையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அமைச்சரான ரமேஷ் பத்திரன அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன். விரைவில் அது தொடர்பில் சிறந்த ஒரு தீர்வை எட்டமுடியும் என்றும் நான் நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

முன்பதாக 2010 ஆம் ஆண்டு பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பனை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையகத்திற்கான கட்டிடத் தொகுதியே இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் திறந்து வைக்கப்பட்டது.

இதனிடையே 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பனை அபிவிருத்தி சபையின் முதலாவது தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பெரிய தந்தையான கே.சி. நித்தியானந்தா அவர்கள் பொறுப்பு வகித்த காலப் பகுதியில், அவரின் பிரத்தியேக செயலாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதியே இன்றையதினம் காலை 9 மணியளவில் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் - மன்றில் டக்ளஸ் M...
போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் - பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிர...