மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உறுதிமிக்க தீர்மானங்கள்!..

Sunday, November 3rd, 2019

மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில் மாற்றமில்லை.
தமிழ் மக்களாகிய நாம் இந்த மாற்றத்தில் பங்கு தாரர்களாக இருக்கப்போகின்றோமா?
பார்வையாளர்களாக இருக்கப்போகின்றோமா? அல்லது வெறும் எதிர்பார்ப்பாளர்களாக இருக்கப் போகின்றோமா? இதை தமிழ் மக்களாகிய நாமே தீர்மானிக்க வேண்டும். நிகழப்போகின்ற அந்த மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு கணிசமான அளவு இருந்தாகவேண்டும்.

அதனூடாகவே அந்த மாற்றத்தின் விமோசனங்களை தமிழ் பேசும் மக்களும் அனுபவிக்க முடியும்.

மாற்றத்தை உருவாக்குவோம் என்று தமிழ் மக்களிடம் கூறி இன்றைய அரசை உருவாக்க பங்களித்த சக தமிழ்க் கட்சிகளே இன்று அதே அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

அவர்களைப் போல் நாமும் எதிர்காலத்தில் எமது அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக ஒருபோதும் கூறப்போவதில்லை.

யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று நாம் கூறுகின்றோமோ அவர்களுக்கு வாக்களித்தால் அதற்கான பொறுப்பை நாமே ஏற்போம்.

எமது மக்களிடம் இன்று இருப்பது வாக்கு பலம் ஒன்றே. அதை வைத்து எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்தே தீருவோம். இந்த உறுதியான ஆத்மபலம் எம்மிடம் உண்டு.

எமது அரசியல் அகராதியில் எமது சொந்தச் சலுகைகளைப் பெறுவதற்காக எக்காலத்திலும் எந்த அரசுடனும் நாம் உறவு வைத்திருந்தவர்கள் அல்ல.

நிகழப்போகின்ற ஆட்சி மாற்றத்தை வைத்து எமது மக்களின் வாக்குப்பலத்தால் அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தருவோம்.

யதார்த்தமான உறுதியான எமது அரசியல் வழிமுறைக்கு யதார்தமானதும், உறுதியானதுமான நாட்டின் தலைவர் ஒருவர் உருவாகும் போது அவரது வருகையை நாம் சரிவர கையாளவேண்டும்.

  1. மாகாணசபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி அதை மேலும் பலப்படுத்தி எமது அரசியல் இலக்குநோக்கி முன்னேறிச் செல்வோம்.
  2. இரு மொழிக் கொள்கையினை உரிய வகையில் நடைமுறைப்படுத்தக் கோருவோம்.
  3. எஞ்சிய தமிழ் அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்விப்போம்.
  4. சகல முன்னாள் போராளிகளுக்கும் வாழ்வாதார வசதிகளையும் நிரந்தர தொழில் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுப்போம்.
  5. எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம். இந்த உறுதிமிக்க கொள்கை வழி நின்று எஞ்சிய எமது மக்களின் நிலங்களையும் மீட்டுக்கொடுப்போம்.
  6. காணமற்போன உறவுகளைத்தேடும் மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் பெற்றுக் கொடுப்போம்.
  7. எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி பணிகளை நாம் விட்ட குறையிலிருந்து மறுபடி தொடருவோம்.
  8. முதல் கட்டமாக வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளில் ஒரு இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்போம். யுத்தம் காரணமாக உரிய கல்வித்தகமையை இழந்து நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதோடு கால அவசியத்தின் அடிப்படையில் அதற்கான கல்வித்தகமையை பெற்றிடவும், தொழில் அனுபவங்களின் அடிப்படையில் நிரந்தர வேலைவாய்ப்பையும் பெற்றிட நடவடிக்கை எடுப்போம்.
  9. வீடற்ற மக்களுக்கு வீடு, நிலமற்ற மக்களுக்கு நிலம். மீள்குடியேறிய மக்களுக்கு நிரந்தர வாழ்வியல் உரிமையினைப் பெற்றுக்கொடுப்போம்.
  10. இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறும் இன மத ரீதியிலான சகல திணிப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவோம்.
  11. பொலிஸ் சேவைகளிலும், முப்படைகளிலும் உள்ள பதவிகளுக்கு இன வீதாசார அடிப்படையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்போம்.
  12. நுண்கடன் காரணமாக பாரிய பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ள மக்களை அந்தப் பாதிப்புக்களில் இருந்து மீட்டு எடுப்பதற்கான உரிய பொறிமுறைகளை உருவாக்குவோம்.
  13. யுத்தம் காரணமாக கணவன்மாரை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பொருளாதாரப் பலத்தினையும், சமூகபாதுகாப்பினையும் வழங்கக் கூடிய உரிய வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுப்போம். விஷேட தேவை உள்ளவர்களுக்கு சமூகத்தில் சமனானவர்கள் என்பதை உறுதிப்படுத்த விஷேட திட்டங்களை உருவாக்குவோம்.
  14. கடற்தொழில், விவசாயம், பனந்தொழில் மற்றும் சகல தொழிற்துறைகளையும் ஊக்குவித்து எமது மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தை வினைத்திறனுடன் முன்னெடுப்போம்.
  15. முள்ளிவாய்க்கால் வரை கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், மதவழிபாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் பொதுச் சதுக்கத்தையும் அதற்கான நினைவு நாளையும் உருவாக்குவோம்.
  16. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சிக்காலத்தில் நாம் கொண்டிருந்த தேசிய நல்லிணக்க உறவையும் அதன் ஊடாக எமது மக்களுக்கு நாம் ஆற்றிய பணிகளின் போது அவர்களுடன் எமக்கு ஏற்பட்ட பரீட்சயத்தையும் அனுபவங்களையும் வைத்து எமது மக்களுக்கான பணிகளை விட்ட குறையிலிருந்து தொடருவோம் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபே ராஜபக்ச அவர்களின் வெற்றியில் நாமும் பங்கெடுக்க தொடர்ந்தும் உழைப்போம் என்றும் அந்த வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றியமைக்க எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிந்தனை வழிநின்று உறுதியுடன் உழைப்போம் என்றும் நாம் தீர்மானம் எடுக்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது ஆற்றலாலும், அனுபவத்தாலும், ஆளுமையாலும் எமது தேசிய நல்லிணக்க உறவினாலும் பாரிய மக்கள் பணியினை வெற்றியுடன் முன்னெடுத்த நாம் மேற்கூறிய எமது கட்சியின் தீர்மானங்களை நாம் விரைவாக நிறைவேற்ற உறுதிகொண்டு உழைப்போம்.

நாம் செல்லும்
பயணம் வெல்லும்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!
உறவுக்கு கரம் கொடுப்போம்!!

மத்தியில் கூட்டாட்சி!
மாநிலத்தில் சுயாட்சி!!

Related posts: