நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
 Saturday, November 26th, 2016
        
                    Saturday, November 26th, 2016
            நமது நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 0.8%ம மானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினைப் பெறக்கூடிய ஒரு நிலையே காணப்படுகின்றது. இவர்களில் பொறியியல், மருத்துவப் பிரிவுகளுக்கு தேர்வாகும் தொகையினர் மிகக் குறைந்த தொகையினராக – அதாவது, 0.12 வீதமாக உள்ளனர். அதே நேரம்இன்றைய நிலையில் பாடசாலைகளில் உயர் தரத்தில் 41 வீதத்தினர் சித்தியடைந்த போதிலும் அதில் சுமார் 4.7 வீதத்தினரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறக் கூடியதான ஒரு நிலைமையே காணப்படுவதாகவும் தெரிய வருகிறது.
அந்த வகையில், உயர் தரம் வரையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்ல இயலாத பல மாணவர்கள் நடுத்தெருவில் கைவிடப்படும் நிலையே காணப்படுகின்றது. எனவே இந்த மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் என்ன? என்பதை நான் இங்கு வினவ விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் –
எமது இளைஞர்கள் பலர், பல்வேறு சமூகச் சீர்கேடுகளை நோக்கிச் செல்வதற்கும் இந்த நிலைமை பிரதானதொரு பங்கினை வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாமல் உள்ளது. எனவே கூடிய வரையிலும் நவீன தொழிற் துறையோடு ஒன்றிணைந்த கல்வி முறைமையினை எமது கல்வித் துறையில் நாம் மேலும், மேலும் உள்ளடக்க வேண்டிய தேவையை நாம் உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளமையை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
எமது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மாணவர்களுக்கான விடுதிகள் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. மேலும், நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளும், அங்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோர் சார்ந்த பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையில் இவ்வாறான தேவைகளைப் படிப்படியாகவேணும் தீர்க்கக் கூடிய நடவடிக்கைகளை இந்த அமைச்சு எடுக்கும் என நான் எதிர்பார்கின்றேன்.
ஏனெனில்இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் எட்டப்படாத நிலையில், அதனால் விரக்தியுறும் மாணவர்கள் தங்களது உணர்ச்சிகளை வெளிக்காட்ட முற்படுகின்றபோது, அவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற சில நடவடிக்கைகள், அந்த மாணவர்களைக் கல்வித்துறை சரர்ந்த ஈடுபாட்டை விடுத்து வேறு வழிகளிலேயே கொண்டு செல்லத் தூண்டக் கூடும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        