திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோரிக்கை.

Sunday, September 13th, 2020

திருகோணமலை மாவட்டத்தின் தொல்பொருட் சின்னங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் பறிபோய்க் கொண்டிருப்பதாகவும், கல்வி வீழ்ச்சியை நோக்கி போன்ற பல்வேறு ஆதங்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று மாவட்டத்தின் பல்துறை சார் பிரதிநிதிகள் சந்தித்து மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துக் கூறியபோதே குறித்த ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான தொன்மையையும் பண்பாட்டு விழுமியங்களும் திருமலை மாவட்டத்தில் அழிக்கப்படும் சூழல் காணப்படுவதாவும் அதனை தடுத்து நிறுத்தத் தவறுவோமாயின் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டனார்.

அதேபோன்று, கிராம மட்டங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார கட்டமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையினால் தமிழ் மக்கள் நகரங்களை நோக்கி நகருவதில் ஆர்வம் காட்டுவதன் காரணமாக பூர்வீக காணிகள் குறைந்த விலைக்கு எனைய தரப்பினருக்கு விற்கப்படுவதால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இழக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான சூழலில் தமிழ் மக்களின் கல்வி செயற்பாடுகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் திட்டமிட்ட முறையில் வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள், குறித்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சர் போதிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: