இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்குவதே அரசின் நோக்கம் – கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளைகளை பெற்றுக்கொடுக்கவும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, October 20th, 2021

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்ற சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் வகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், இரசாயன உரங்களை  முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தேவையான இயற்கை உரங்களை உடனடியாக பெற்றக்கொள்வது சாத்தியமில்லை எனவும் தெரிவித்தனர்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட  ஏற்பாடுகளுக்கு அமைய சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விவசாயத் துறைசார் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சேதன திரவம் மற்றும் நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப...
புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.
வடக்கில் மீண்டும் ஸ்கின் டைவிங் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதி - கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட ...