காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து, மீண்டும் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதிலும், உரித்தைப் பெற்றுக் கொள்வதிலும் ஏற்படுகின்ற காணிப் பிணக்குகள் அதிகமாகக் காணப்படுகின்ற நிலையில், இதற்கு துரித ஏற்பாடாக அப் பகுதிகளில் காணிக் கச்சேரிகளை நடத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தல், மக்களது ஆதனங்களை இனங்கண்டு கொள்ள முடியாமை, உரிய ஆவணங்கள் அல்லது பதிவேடுகள் அழிந்து போயுள்ளமை, அந்த ஆதனங்களில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றமை, விவசாய நிலங்களில் பிறர் பயிர்ச் செய்கையினை மேற்கொள்கின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

அதே நேரம், கடந்த கால அரசியல் சூழ்நிலைகள், அச்சுறுத்தலான பின்னணிகள், நிச்சயமற்ற எதிர்பார்ப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் காணிகள், கட்டடங்கள் என்பன மாற்று நபர்களுக்கு குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை, அல்லது, அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு, கைமாற்றம் செய்துள்ள சந்தர்ப்பங்கள் என்பன தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றங்களில் தங்களது உடமையுரித்து குறித்து மீள நிலை நிறுத்துவதற்கும், யுத்தம் தவிர்ந்த ஏனைய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் குழப்ப சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்துக் கொண்டிருப்போருக்கு எதிராக தமது உரிமைகளை மீள நிலை நிறுத்துவதற்கும் இயலாமையுடையவர்களை, இயலச் செய்வது தொடர்பில் விசேட சட்ட ஏற்பாடுகளை வகுக்க வேண்டிய தேவை குறித்து இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேற்படி விடயங்களை சீர்திருத்தங்களாக 2016ம் ஆண்டின் 5ம் இலக்க ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும், அத்துடன், ஆட்சியுரிமை அடிப்படையில் பாதிக்கப்பட்ட பிறருக்குச் சொந்தமான காணிகளில் பல ஆண்டு காலமாக திருத்தங்களையும், முதலீடுகளையும், பண்ணைகள் மற்றும் பயிர்ச் செய்கைகளையும் மேற்கொண்டு, அதற்கான செலவுகளை செய்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மற்றைய தரப்பினருக்கு இச் சட்டமானது பாதகமான விளைவுகளைத் தரக்கூடும் என்பதால், இதற்கொரு மாற்றுத் திட்டத்தை விரைவாக வகுக்குமாறும்,

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றங்களில் இச்சட்ட மூலத்தின் அடிப்படையிலான கோரிக்கைகளை முன்வைத்து, தீர்வுகளை நாடுவது என்பது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருத்தமாக இருக்காது என்பதால், விசேட காணி மத்தியஸ்த முறைமையொன்றை, மாற்று ஏற்பாடாக இதற்கென அமைக்குமாறும், பாதுகாப்புப் படையினர் தம் வசம் கொண்டுள்ள பொது மக்களின் காணி, நிலங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித சாதகமான சட்ட ஏற்பாடுகளும் வழங்கப்படாதுள்ள நிலையில், மேற்படிச் சட்டத்தில் அதற்கான விசேட ஏற்பாடொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

2592102841_7d94cbb5bc_z copy

Related posts: