எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்!

Friday, July 19th, 2019

களுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய 14 ஆவது குற்றவாளியை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய (19) பத்திரிகை ஒன்றில் குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. இது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எம். பி. யுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

1998 ஆம் ஆண்டு ஜுன்மாதம் 30 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் கோரிக்கைக்கு அமைவாக  கைதிகளை பார்வையிடச் சென்றபோது என்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் எனக்கு 57 இடங்களில் காயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களுள் 14 வது குற்றவாளி மீதான விசாரணையை மீளவும் விசாரிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் குறித்த எதிரி உள்ளிட்ட 16 பேர் தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டிருந்த நிலையில் 15 பேர் தப்பிச்சென்றிருந்த போதும் குறித்த குற்றவாளிக்கு வழங்கிய தீர்ப்பில் வழக்கை ஜுரர் சபை முன்னால் விசாரிக்க வேண்டுமா?இல்லையா? என குற்றச்சாட்டப்பட்டவரை மேல் நீதிமன்ற நீதிபதி கேட்கத் தவறியிருப்பதால் வழக்கு விசாரணையையும் தண்டனையையும் செல்லுபடியற்றதாகவும் அத்துடன் குறித்த சம்பவம் 21 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாலும் அது தொடர்பான விசாரணையை மீள விசாரணைக்கு அனுப்பாது விடுதலை செய்ய வேண்டும் என குற்றவாளி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது நான் உயிருடன் உள்ளதாலும் இந்த வழக்கை மீள விசாரிப்பது சிறந்ததென குறிப்பிட்டு மீள் விசாரணை செய்வதற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் “எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?”  என்ற நோக்குடன் குறித்த குற்றவாளியை விடுதலை செய்யுமாறு நான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்ததுடன் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனாலும் தற்போது குறித்த குற்றவாளி மீது மீள விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றால் உத்தவிப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போதும் எனது நிலைப்பாடு குறித்த குற்றவாளியை விடுதலை செய்யவேண்டும் என்பதாகவே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே இதுபோன்றதொரு தற்கொலை கொலை முயற்சியை கொள்ளுப்பிட்டியில் 2004 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் திகதி மேற்கொண்ட மற்றொரு குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஏற்கனவே டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் பகிரங்கமாகவே கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி! (...
நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு!