இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017

இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்கும் வகையிலும், அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், அதே நேரம் மது பாவனையை மேலும் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் மதுபான சாலைகளை நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் காணி (பாரதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இன்று எமது நாட்டில் மதுபானம் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்ற மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடத்தையும். மட்டக்களப்பு இரண்டாம் இடத்தையும், நுவரெலியா மூன்றாம் இடத்தையும் வகிக்கின்ற ஒரு நிலையை காண்கின்றோம்.

இந்த மாவட்டங்களில் காணப்படுகின்ற மதுபான சாலைகளில் அநேகமானவை பாடசாலைகள், வணக்க வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை அண்மித்ததாக அமையப்பெற்றுள்ள காரணத்தினால், அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 4.5 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் லீற்றர் மதுபானம் அருந்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றமைக்கு இந்த மதுபான பாவனையும் பிரதான காரணமாகும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எனவே, இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஒரு காலத்தில் யுத்தம் காரணமாக அழிந்த எமது சமுதாயம் இன்று, மதுபானத்தால் அழிந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

போதைப் பொருள் மற்றும் புகையிலைத் தயாரிப்புகளுக்கு எதிராக மிக அதிகமாகப் பேசப்படுகின்ற தற்போதைய சூழ்நிலையில், 2020ம் ஆண்டில் போதைப் பொருள் பாவனையற்ற நாடாக எமது நாட்டை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில், அதீத மது பாவனை குறித்தும் விழிப்புணர்வுகளையும், மேலும் வலுவான திட்டங்களையும் முன்னெடுக்க இந்த அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, எமது நாட்டைப் பொறுத்த வரையில் 12 பௌர்ணமி தினங்களிலும், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு மறு தினமும் என 13 நாட்களிலும், தேசிய சுதந்திர தினம், உலக மது ஒழிப்புத் தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினம், ஈதுல் பித்ர் – றமழான் பெருநாள் தினம், நத்தார் தினம் ஆகிய 6 நாட்களிலுமாக வருடத்தில் 19 நாட்கள் மதுபான நிலையங்கள் மூடப்படுகின்றன.

அதே நேரம், இந்து மக்களின் மிக முக்கிய மத அனுஷ்டான தினங்களாகிய மகா சிவராத்திரி தினத்திலும், தைப் பொங்கல், தீபாவளி போன்ற திருநாட்களிலும், அதே போன்று சகோதர முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமான தினமாகக் கொண்டாடப்படுகின்ற முஹம்மது நபிகளார் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்திலும், ஈதுல் அல்ஹா – ஹஜ்ஜூப் பெருநாள் தினத்திலும் மேற்படி மதுபான சாலைகள் மூடப்படுவதில்லை.

எனவே, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்கும் வகையிலும், அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், அதே நேரம் மது பாவனையை மேலும் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் மேற்படி நாட்களிலும் மதுபான சாலைகளை நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

 parlia copy

Related posts:


அரச ஸ்தாபனங்களில் மூவினப் பிரதிநிதிகள் அவசியம்!நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்க...
எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...