இந்து மற்றும் முஸ்லிம் மக்களது மத ரீதியிலான  நாட்களிலும் மதுபான சாலைகளை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்! – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, February 11th, 2017

இந்து மற்றும் இஸ்லாமிய மக்களது மத ரீதியிலான முக்கியத்துவமிக்க நாட்களான சிவராத்திரி, தைப் பொங்கல், தீபாவளி, மீலாதுன் நபி தினம் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் போன்ற தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளை மூடுவதற்கு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்து, அதனை செயற்படுத்துமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், எமது நாட்டைப் பொறுத்த வரையில் 12 பௌர்ணமி தினங்களிலும், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு மறு தினமும் என 13 நாட்களிலும், தேசிய சுதந்திர தினம், உலக மது ஒழிப்புத் தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய தினம், தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினம், ஈதுல் பித்ர் – றமழான் பெருநாள் தினம், நத்தார் தினம் ஆகிய 6 நாட்களிலுமாக வருடத்தில் 19 நாட்கள் மதுபான நிலையங்கள் மூடப்படுகின்றன.

அதே நேரம், இந்து மக்களின் மத ரீதியிலான  முக்கியத்துவமிக்க   தினங்களாகிய மகா சிவராத்திரி தினத்திலும், தைப் பொங்கல், தீபாவளி போன்ற திருநாட்களிலும், அதே போன்று சகோதர முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமான தினமாகக் கொண்டாடப்படுகின்ற முஹம்மது நபிகளாரது பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்திலும், ஈதுல் அல்ஹா – ஹஜ்ஜூப் பெருநாள் தினத்திலும் மேற்படி மதுபான சாலைகள் மூடப்படுவதில்லை.

எனவே, இவ்விடயம் தொடர்பில் கூடிய அவதானத்தைச் செலுத்தி, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்கும் வகையிலும், அந்த மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையிலும், அதே நேரம் எமது நாட்டில் மது பாவனையை மேலும் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்துகின்ற நோக்கிலும,; மேற்படி 5 நாட்களிலும் மதுபான சாலைகளை நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து, அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து உதவுமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DD11

Related posts:

உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வது அவ...
கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸ...
கொள்கை அடிப்படையிலேயே முன்னாள் சுகாதார அமைச்சரின் மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி ...