இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படாது: அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Thursday, July 22nd, 2021

கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும்  தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும்,  எமது நலன்களுக்கோ அல்லது  அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.

அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படு்த்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

“இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கெளதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.

சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில் அல்லது அயல் நாடான இந்தியாவின்  பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு  செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது” எனறு அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: