பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் – நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 26th, 2019

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என இந்தச் சபையிலே கடந்த 22 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் அண்மையில் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டிருந்தன. இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குமாறு அக்கட்சி வலியுறுத்தியுள்ளதாகவும், அதற்கு இடமில்லை எனக் கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன அவர்களது கூற்றை ஏற்க முடியாது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன.

அதே தினம், கொழும்பில் இடம்பெற்றிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த பிரதமர் அவர்கள், கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனீவா கூட்டத் தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதாவது, ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவதைப் போல்”;, இந்த இரு கூற்றுகளையும் பார்க்கின்ற எவருக்கும் அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிரெதிரான கொள்கைளுடன் – அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சார்பாகவும், அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றன என்ற விடயத்தைக் காட்டுவதற்கே இந்தக் கூட்டமைப்பு முற்பட்டாலும் அது, உண்மையல்ல என்பதை எமது மக்கள் நன்கறிவார்கள்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கூறியபோது, இலங்கையின் அரசியல் யாப்பு மற்றும் சட்ட சவால்கள் இலங்கை பிரஜைகள் அல்லாதவர்களை உள்ளடக்குவதனை தடுக்கின்றன என்றும், அது 2ஃ3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பு வாக்குகள் வழங்கி, யாப்பில் மாற்றம் கொண்டு வரப்படுவதன் ஊடாகவும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே அன்றி சாத்தியப்பட மாட்டாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச தரப்பில் இவ்வாறான தெளிவுகள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு, “அரசாங்கம் சார்பாக மேலே உள்ள அளவுகோல்களின் அடிப்படையில், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இலங்கை தொடர்ந்தும் கடமையாற்றும் என நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டே இணை அனுசரணையில் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த எச்சரிக்கையானது எதற்கானது? என்பது தொடர்பில் சிந்தித்துப் பார்த்தால் அது வெறும் சுயலாப அரசியலுக்கானது என்பது தெரிய வரும்.

இலங்கையில் ஏற்கனவே வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புகள் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் இந்தச் சபையிலே கூறியிருக்கின்றார்கள் எனில், இதை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 40வது கூட்டத் தொடரின்போது வலியுறுத்தினார்களா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இலங்கை அரசு மாற்றங்களைக் கொண்டு வருமா? என்பதைக் கண்காணிப்பதற்காகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதனை வரவேற்பதற்கு இதில் ஒன்றுமே இல்லை.

மேலும், இந்த அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்றோ எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களும் இல்லை என்பதை தமிழ் சமூகம்; ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத் தொடரின்போது, வாயே திறக்கவில்லை என்பது வெட்டவெளிச்சமான உண்மையாகும்.

இத்தகைய நிலையில், இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கையை கோரும் அதே நேரம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு உட்பட்டு அதி உச்சக்கட்டமாக பெறப்படக்கூடிய இலங்கைக்கான ஓர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரையும், வடக்கில், கிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னமும் தேவை என சிவில் சமூகமானது கோரியிருந்த நிலையில், மனித உரிமை ஆணையாளரும் அதை தனது உரையில் வழிமொழிந்திருந்த நிலையில், மனித உரிமை பேரவையில் இருந்து கொண்டே நாம் சாதிக்கலாம் என்ற இந்தத் தமிழ்த் தரப்பு ஏன் இந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்கவில்லை?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எச்சரிப்பதற்கு வல்லமை பெற்றவர்களுக்கு இதை செய்திருக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்புகின்ற தமிழ் சமூகமானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு உட்பட்டுகூட அதி உச்சக் கோரிக்கையை இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கவில்லை. தீர்மானம் முடிந்த அடுத்த நாளே இரண்டு வருடங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செல்ல வேண்டி வருமென வாய்ச் சவடால் விடுகின்றனர். இதை தீர்மானம் வருமுன்னர் செய்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்...
கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகா...
மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!