பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – சுகாதாரம் தொடர்பாக அதீத கரிசனை!

Saturday, June 4th, 2022

பேலியகொட மீன் சந்தையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தையின் சுகாதார விடயத்தில் அதிக அக்கறை செலுத்தியதுடன், சந்தைக்கு எடுத்து வரப்படுகின்ற கடலுணவுகள் மற்றும் ஐஸ் கட்டிகள் தினமும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(04.06.2022) மேற்கொள்ளப்பட்டது

சந்தையின் நாளாந்தச் செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர், பல்வேறு தரப்புக்களினால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

குறிப்பாக, சில்லறை வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சந்தையின் கட்டிடத் தொகுதி தமது தொழில் நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றது என்ற குற்றச்சாட்டு, சில்லறை வியாபாரிகளினால் முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாத காலத்தினுள் நியாயமான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்கா உட்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

மேலும், சந்தை செயற்பாடுகளை நிரந்தரமாக விஸ்தரிக்கப்பதற்கு ஏதுவாக, அரசுக் சொந்தமான காணியை மீன் சந்தைக்கு பெற்றுத் தருமாறும், மேலதிகமாக பிரதான வீதிக்கான ஒரு நுழைவாயிலை அமைக்க ஏற்பாடு செய்யுமாறும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த கடற்றொழில் அமைச்சர், அரச காணியை பெற்றுக் கொள்வதற்கு புதிய அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பிப்பதற்கும், நுழைவாயில் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானித்தார்.

சந்தைக்கான ஐஸ் விநியோகம் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு, வியாபாரிகளுக்கு தேவையான ஐஸ் கட்டிகள் தரமானதாகவும் நியாயமானதாகவும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், எடுத்து வரப்படுகின்ற ஐஸ் கட்டிகள் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படடது.

அவ்வாறே, விற்பனை செய்யப்படுகின்ற கடலுணவுகள் அனைத்தும் நாரா நிறுவனத்தினால் பரிசோதிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தைத் தொகுதியின் சுகாதாரம், குளிரூட்டல் பகுதி போன்றவற்றின் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, தேவையான ஆலோசனைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.-

Related posts:


துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் - டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்...
இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...