புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் மாற்றீடு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 1st, 2017

வட பகுதியில் புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு மாற்றீடான அல்லது மாற்றுத் தொழில் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம்(01) நடைபெற்ற தீவகப்பிரதேச புகையிலைச் செய்கையாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலம் தெரிவிக்கையில் –

தீவகம் மட்டுமல்லாது வடபகுதியில் பெரும்பாலானவர்கள் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் புகையிலைச் செய்கையை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமது பிரதான பணப்பயிராக மேற்கொண்டுவரும் வடபகுதி புகையிலைச் செய்கையாளர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்தநிலையில் புகையிலைச் செய்கையை நிறுத்தும் பட்சத்தில் அதற்கு ஈடான மாற்று தொழில்துறைகளையோ அன்றி நடவடிக்கைகளோ எடுக்கப்படாது இவ்வாறான அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளமையானது புகையிலைச் செய்கையாளர்களைப் பொறுத்தவகையில் அதிருப்தியான செய்தியாகவே இருக்கின்றது. எனவே இது விடயம் தொடர்பில் துறைசார்ந்த அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதனிடையே காலபோகத்தை நம்பி புகையிலை செய்கையில் மட்டும் ஈடுபடும் தீவக மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு புகையிலைச் செய்கை தடை அறிவறுத்தலானது நிச்சயம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பகின்றேன்.

அந்தவகையில் இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாகவம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts: