சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, March 21st, 2018

தமிழ் மொழியில் மாத்திரமே பரிச்சயம் கொண்ட ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுமிடத்து, தமிழ் மொழியில் பரிச்சயமற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் வாக்குமூலங்கள் பதியப்படுகின்ற நிலைமைகள் எமது நாட்டில் இல்லாமல் இல்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் பதிவு செய்யப்படுகின்ற வாக்குமூலங்கள் எந்தளவிற்கு உண்மைத் தன்மையுடையதாக, சரியானதாக இருக்குமென்பது கேள்விக்குறியாகும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம,; நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையளில் –

நாங்கள் இயற்றுகின்ற சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும். இந்த நாடு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகின்றது. எனவே பகைமைகள் மறுக்கப்பட வேண்டும். இனங்களிடையே சந்தேகங்கள் அகற்றப்பட்டு, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும். அதனை நோக்கிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை தகர்க்கின்ற செயற்பாடுகளுக்கு எதிரான சட்ட மூலங்கள் வகுக்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப்படுவதில் இருந்துதான் இந்த நாடு, இந்த நாட்டு மக்களது நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்கின்ற பாடங்கள் இந்த நாட்டில் செயற்பாட்டு ரீதியில் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை தொடர்பிலும் எமக்கு கேள்விகள் இல்லாமல் இல்லை.

அதாவது, சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டு, வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர்தான் அவர் சட்டத்தரணியின் உதவியை நாட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

பொலிஸாருக்கு முதலில் வழங்கும் வாக்குமூலமே அநேகமான வழக்குகளில் முக்கிய சாட்சியாக மாற்றம் பெறுகின்ற நிலைமைகள் இல்லாமல் இல்லை. இத்தகைய நிலையில், குற்றம் செய்யாதவர்கள்கூட குற்றவாளியாக்கப்படுகின்ற நிலைமைகள் உருவாகக் கூடும் என்பதால், இது தொடர்பில் மீள் பரிசீலனை அவசியமாகின்றது என்ற விடயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், இந்த நாட்டில் இருக்கின்ற குழப்பங்களையே இன்னும் தீர்க்க முடியாதுள்ள நிலையில், மேலும், மேலும் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்காமல்,  இந்த நாட்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து, இந்த நாட்டை சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கியமான அரசியல் நோக்கி நகர்த்துகின்ற வகையிலான, எமது நாட்டுக்குப் பொருத்தமான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, சிந்தித்து, செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் நாம் - டக்ளஸ் தேவானந்...
நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் - மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...