நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2019

முஸ்லிம் மக்களின் பெயரால் இலங்கையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வன்முறையை எந்த இன சமூகத்தின் பெயரால் நடத்தப்பட்டதோ அந்த இன சமூக மக்களே அதை முழுமையாக எதிர்த்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது இலங்கையில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் இதை கண்டித்திருக்கிறார்கள். இந்த எதிர்ப்பலையானது இந்த வன்முறை கலாசாரத்தை முற்றாக அழிக்க வழிகோலும் வகையில் அமைந்துள்ளது.

இதேபோல கடந்த கால ஆயுதப் போராட்டங்கள் அழிவு யுத்தமாக மாறியதால் இலக்கற்ற வன்முறைகளை எமது மக்கள் எதிர்கொண்டிருந்தபோது குறிப்பாக 1987 இல் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னராவது எமது மக்கள் குரல் கொடுத்திருந்தால் தமிழ் மக்கள் மட்டுமல்ல இந்த நாடும் இத்தனை அவலங்களையும் துன்ப துயரங்களையும் எதிர்நோக்கியிருக்க வேண்டியிருந்திருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாட்டையே உலுக்கிய குறித்த சம்பவத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் இதை கண்டித்துள்ளோம். நாடாளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் அறிக்கையையும் வெளிப்படுத்தியிருந்துள்ளோம்.

இன்று நாட்டில் உருவாகியுள்ள பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் எதுவித எதிர்ப்பும் இன்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதுவும் ஒரு மாற்றமாகத்தான் தெரிகின்றது.

கடந்தகால வன்முறை நடத்திய வடுக்கள் இன்னும் தீரவில்லை. அதற்கான பரிகாரங்களும் இன்னும் வழங்கப்படவில்லை. அந்தவகையில் மீண்டும் ஒரு வன்முறையா? கடந்தகால வன்முறைகள் எமது மக்களை வெகுவாக பாதித்திருக்கின்றது. அதுவே இந்த பயங்கரவாதத்திற்கான ஒருமித்த எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது என நம்புகின்றேன்.

கடந்தகாலத்தில் வன்முறை எமது நீதியான போராட்டத்திற்கான நியாயமானது என்ற ரீதியில் அமைந்திருந்தது. ஆனாலும் ஆயுதப்போராட்டம் அழிவு யுத்தமாக மாறி வன்முறைகளை மட்டுமே எமது மக்கள் அனுபவித்துக்கொண்டிருந்த போது அதையும் நாம் எதிர்த்திருக்கின்றோம். இன்றைய வன்முறை எதிர்ப்பு மக்களிடமிருந்து அன்றும் எழுந்திருந்தால் எமது போராட்ட வழிமுறையை மாற்றி அன்றே எமது உரிமைகளை நாம் பெற்றிருக்க முடிந்திருக்கும்.

இலக்கற்ற வன்முறைகளை நாம் என்றுமே எதிர்த்தவர்கள். வன்முறைகளை எதிர்க்கும் நடவடிக்கைகள் எந்தவொரு இன சமூக மக்களையும் பாதித்து விடக்கூடாது. அவசர காலசட்டத்திற்கு ஒரு மனித முகம் இருக்க வேண்டும். மக்களை வன்முறைக்கு எதிரான பக்கம் வென்றெடுக்க வேண்டும். மாறாக வன்முறையின் பக்கம் மக்களை தள்ளிவிடக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: