கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, July 26th, 2019

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை தமிழ் மக்களது ஏனைய எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மாட்டோம் என்றவர்கள், எமது மக்களுக்கு அன்றாட, அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ, அபிவிருத்தி தேவையில்லை, அரசியல் தீர்வே தேவை என்றவர்கள், அதற்காகவே இந்த அரசாங்கத்தைத் தாங்கள் கொண்டு வந்ததாகக் கூறினார்கள்.

இந்த அரசாங்கத்தின் முதல் அத்தியாயம் தொடங்கியிருந்த ஆரம்பத்தில் நூறு நாட்கள் வேலைத் திட்டமென ஒரு காலகட்டம் உருவாகியிருந்தது. அதன்போது இந்த அரசாங்கம் தென் பகுதி சார்ந்த தமது தேவைகள் அனைத்தையும் வெகுவிரைவாக நிறைவேற்றிக் கொண்டது. இந்தத் தமிழ்த் தரப்பினர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இதயசுத்தியுடன் இருந்திருந்தால், அப்போதே ஏதாவதொரு இலக்கை எட்டியிருக்க முடியும். ஆனால், அதை இந்தத் தமிழ்த் தரப்பினர் செய்திருக்கவில்லை.

பின்னர், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த அரசாங்கத்தின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமானது. இதன் ஆரம்ப கட்டத்தில்கூட இந்தப் பிரச்சினைக்கு ஏதாவதொரு தீர்வினை எட்டியிருக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு மிக அதிகளவில் இருந்தது. இருந்தும் அவர்கள் அது குறித்து எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

அதன் பின்னர், இந்த அரசுக்கு எதிரான பல்வேறு நிலைமைகள் நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்டபோது, இந்த அரசை தனித்து நின்று, முண்டு கொடுத்துக் காப்பாற்றும் அளவுக்கு வந்துவிட்ட இவர்கள், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பில் எவ்விதமான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு, இன்று இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டே, அரசாங்கத்தில் இல்லாததுபோல் மக்கள் முன்பாக நடிப்பதுதான் இவர்களது அரசியலின் இன்றைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகின்றது.

அரசியல் யாப்புச் சபையின் வழிநடத்தல் குழு அடங்கலாக ஏனைய 06 உப குழுக்களும் கடந்த 2017ஆம் ஆண்டு தமது அறிக்கைளைச் சம்ரப்பித்திருந்த நிலையில், 2018ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் வரையில் அது தொடர்பிலான ஒரு வரைபினைத் தயாரிக்காது, வாய்பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒக்டோபர் மாத ஆட்சி மாற்றத்தின்மீது இப்போது பழி சுமத்தப் பார்க்கிறார்கள். இப்படித்தான் இவர்கள் தமது கையாலாகாத தனத்தினை மூடி மறைத்து வருகிறார்கள்.

19வது திருத்தச் சட்டத்தின் தயாரிப்பில் மிக முக்கிய பங்கினை இவர்கள் வகித்ததாக இவர்களே கூறி வருகின்ற நிலையில், அந்தத் திருத்தச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டத்தினை மேலும் வலுப்படுத்தி, அதிகாரப் பரவலாக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்க இவர்களால் ஏன் இயலாமற் போனது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

ஆக, இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருந்தும், தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத இவர்கள், இந்த அரசாங்கத்தின் இறுதிக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் தீர்வு தொடர்பில் – அரசியல் அமைப்பில் மறுசீரமைப்புத் தொடர்பில் கதைக்கின்றார்கள் எனில், இதை என்னவென்று சொல்வது? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

கடந்த காலங்களில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கென கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களையும் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வராத கூட்டத்தினர் இப்போதும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ஆட்சியில் இருந்து கொண்டே புறக்கணித்து வருவதுதான் கொடுமையான விடயமாக இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts: