தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம் -தேசிய எழுச்சி மாநாட்டு செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, May 9th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் தமிழ் மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைகளுக்காக நடைமுறை யதார்த்த வழியில் நின்று உறுதியாக உழைத்து வருவதோடு தேசிய நல்லிணக்கத்தினூடாக ஒரு நிரந்தரமான வாழ்வியல் சூழலை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க ஜனநாயக வழிகளில் போராடி வருகின்றோம். அதனை மேலும் வலிமையாக்குவதற்கான ஒரு படிமுறையாகவே இந்த தேசிய எழுச்சி மாநாடு அமைகின்றது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டு செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

நேற்றையதினம் (08) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டு குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய செய்தியின் முழுவடிவம் எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

 

உறுதி கொண்டு உழைக்கும்
எம் இனிய தோழர்களே!..
பாசமிக்க எம் தமிழ் பேசும் மக்களே!…
ஆன்மீக தலைவர்களே!…
சமூக அக்கறையாளர்களே!…
நேசத்திற்குரிய நண்பர்களே!…
கல்விச்சான்றோர்களே!….
உங்களுக்கு வணக்கம்.

 

எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இந்த தேசிய எழுச்சி மாநாடு ஊடாக உங்கள் அனைவரோடும் நான் மனந்திறந்து பேசும் அரியதொரு வாய்ப்பை எனக்கு மறுபடியும் வழங்கியிருக்கிறது. இது குறித்து நான் சந்தோஷமடைகின்றேன்.

 

ஒரு கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு என்பது வெறுமனே கட்சி உறுப்பினர்கள் கூடிப்பேசி கலைவது என்பது மட்டும் அர்த்தமல்ல.

 

அவ்வாறு கட்சி உறுப்பினர்கள் வெறுமனே கூடிப்பேசி கலைவதை மட்டுமே கட்சி மாநாடாக நாம் நினைத்திருந்தால் அடிக்கடி எமது கட்சியின் மாநாடுகளை நாம் நடத்தி வந்திருக்க முடியும்.

 

ஆனாலும் ஒரு அர்த்த பூர்வமான மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மாநாட்டின் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி எமது கட்சி முன்னரை விடவும் வீரியமுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகவும், பலத்த தடைகளுக்கு மத்தியிலும் காலம் தாழ்த்தியாவது எமது எண்ணக்கனவுகளை நிறைவேற்றும் வகையில் இன்றைய தேசிய எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

 

இதே வேளை எமது ஆரம்ப கால உரிமைப்போராட்டம் தொடக்கம் ஐனநாயக வழிமுறையிலான எமது இலட்சிய பயணம் வரை எம்முடன் கூடவே நடந்து தமது இன்னுயிர்களை எமது மக்களுக்காக அர்ப்பணித்த எமது தோழர்களை இந்த இடத்தில் நான் நினைத்துப்பார்க்கிறேன்.

 

எண்ணற்ற இலட்சிய கனவுகளை தமது எண்ணங்களில் ஏந்தி எனது கண்களாகவும், கால்களாகவும், இறக்கைகளாகவும் என்னுடன் கூடவே நடந்து பயணித்து அர்ப்பணங்களை ஆற்றி,…

 

சுடர் விட்டு பிரகாசிக்கும் எமது சுதந்திர உணர்வுகளுக்கு தமது உயிர்களை உரமாக வழங்கிய எமது தோழர்களுக்கு எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மரியாதை செலுத்துகின்றது.

 

எமது கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு விடா முயற்சியுடன் வியர்வை சிந்தி உழைத்த அனைத்து தோழர்களினதும் உறுதி மிக்க உணர்வுகளுக்கு நான் மரியாதை வழங்குகின்றேன்.

 

தமது மதியுரைகளை வழங்கி எம்மை ஊக்குவித்த அனைத்து ஆதரவு நெஞ்சங்களுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

 

எமது தேசிய எழுச்சி மாநாடு என்பது எமது கட்சிக்கு கிடைத்த வெற்றி என்பதற்கு அப்பால், இந்த மாநாட்டின் ஊடாக நாம் எடுக்கும் தீர்மானங்களால் தமது அரசியல் அபிலாசைகளை எட்டிவிடப் போகும் எமது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றே நம்புகின்றோம்.

 

தமிழ் பேசும் மக்கள் இலங்கைதீவின் வரலாற்று காலம் தொட்டு வாழ்ந்து வரும் ஒரு பூர்வீக குடிமக்கள்.

 

தனியான மொழி, பாரம்பரிய நிலம், தனித்துவமான கலைகலாச்சார பண்பாடுகள், பொதுவான பொருளாதார வளங்கள் என ஒரு தேசிய இனத்திற்கான அனைத்து அடையாளங்களையும் இன்று வரை தமிழ் பேசும் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

 

இவைகளை விடவும் நாம் ஒரு தேசிய இனம் என்ற உணர்வுகள் எமது மக்களின்
ஆழ் மனங்களில் இருந்து இன்றும் சுடர்விட்டு பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

 

எமது மக்கள் அன்றைய ஆளும் அரசுகளால் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு நின்றபோதுதான்,௪எமது மக்களுக்கான உரிமைக்குரல்கள் அன்று சாத்வீக வழிமுறையில் எழுந்திருந்தன.

 

ஆனாலும் அன்றைய பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைகள் தாம் எண்ணியிருந்த சாத்வீகப்போராட்டங்களை தொடர்ச்சியாகவோ அன்றி உறுதியாகவோ முன்னெடுத்திருக்கவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தை கைவிட்டு எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை தமது தேர்தல் வெற்றிக்காகவே பயன்படுத்திக்கொண்டனர்.

 

இதேவேளை இலங்கைத்தீவில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த தென்னிலங்கை அரசுகளும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்குவதற்கு விருப்பமின்றியே வந்திருந்தன. அன்றைய ஆளும் அரசுகளின் பேரினவாத சிந்தனைகளும்
அதன் செயற்பாட்டு வடிவங்களும் எமது மக்களை இரண்டாந்தர பிரiஐகாளகவே ஒதுக்கி வைத்து மாற்றந்தாய் மனப்பாங்கில் மட்டுமே ஆட்சி நாட்காலிகளில் குந்தியிருந்தன.

 

இதனால் பாரம்பரிய தமிழ் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப்போராட்டங்கள் எமது மக்களுக்கு அரசியல் தீர்வெதையும் பெற்றுத்தராமால் வெறும் பூச்சியங்களையே முடிவாக தந்திருந்தன.

 

அதுமட்டுமல்ல சாத்வீகம் இனி சரிப்பட்டுவராது என்றும், ஆயுத வழிமுறையே தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை பெற்றுத்தரும் என்றும் அன்றைய வரலாற்று அனுபவங்கள் எமக்கு கட்டளையிட்டன.

 

 

இன்று ஈழ மக்கள் ஐனநாயககட்சியை தலைமையேற்று வழி நடத்தி செல்லும் நானும், எமது கட்சியில் அங்கம் வகிக்கும் பல தோழர்களும் அன்றைய ஆயுதப் போராட்டக்களத்தில் நின்றவர்களே.

 

எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, மற்றும் சுயநிர்ணய உரிமைக்காக நாம் களத்தில் நின்று இரத்தம் சிந்தி போராடியவர்கள். மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியவர்கள்.

 

எமது மக்களின் விடிவிற்காக மாபெரும் சுதந்திரப்போராட்ட இயக்கமொன்றை
வழி நடத்திச்சென்ற தியாக வரலாறு எமக்கு உண்டு. ஆனாலும் நாம் வெறும் உணர்ச்சி வேகத்தில் உந்தப்பட்டு உரிமைப்போராட்ட களம் நோக்கி வந்தவர்கள் அல்ல. வெறுமனே பிரிவினைவாதிகளாகவோ அல்லது குறுந்தேசிய இனவாத நோக்கிலோ ஒரு போதும் செயலாற்றியவர்களும் அல்ல.

 

அன்றைய சூழலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்ட மக்களின் சமூக மாற்றத்தை நோக்கிய ஆயுதப்புரட்சிக்கான சமிக்ஞை ஒன்று தென்னிலங்கையில் இருந்து பலமாக எழுந்திருந்தால், அந்த வழிமுறையில் நின்றே நாமும் எமது போராடும் கரங்களை உயர்த்தியிருப்போம்.

 

தவிர்க்க முடியாத ஒரு காலச்சூழலில் இருந்தே நாம் இலங்கைத்தீவின் ஒரு பகுதிப்புரட்சியாக தமிழ் பேசும் மக்களுக்கான தேசவிடுதலை போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

 

ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக எமது தேச விடுதலைப்போராட்டக்களத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய விடுதலை அமைப்புகள் யாவும் முரண்பட்டு பகைப்பட்டு மோதி திசைக்கொன்றாக சிதறி நின்றன.

 

தாம் மட்டும் ஆள வேண்டும் என்ற அடங்காத ஆசைகளும், விடுதலை அமைப்புக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகளுக்கும் சகோதரப்படுகொலைகளுக்கும் வித்திட்டன.

 

இதனால் அடைய வேண்டிய இலக்கு நோக்கி செல்ல வேண்டிய எமது புனித இலட்சிய போராட்டம் அழிவு யுத்தமாக மாறிச்செல்ல தொடங்கியது.
உரிமை போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி தொடர வேண்டிய வழிமுறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

பேரம் பேசும் பலம் எமது கைகளிகளில் இருக்கும்போதே மாறி வரும் உலக ஒழுங்கை ஏற்று, அதை அனுசரித்து நாம் அரசியல் தீர்வொன்றிற்குள் நுழைந்திருக்க வேண்டும்.

 

ஆனாலும் அது இங்கு நடந்திருக்கவில்லை. எமது உரிமை போராட்டம் என்பது அழிவு யுத்தமாக மாறிச்சென்றபோது அதிலிருந்து மீள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாகவும், எமது அரசியல் இலக்கு நோக்கி செல்வதற்கான ஒரு ஆரம்ப படியாகவும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமக்கு கிடைத்திருந்தது.

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களிடம் அரசியல் தொலை தூரப்பார்வை இருந்திருந்தாலும் அவர்கள் அதை சரியான முறையில் நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை.

 

அதேபோல் அதை அரைகுறைத் தீர்வு என்று நிராகரித்தவர்கள் இறுதி வரை இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு நிகராகவோ அல்லது அதற்கு மாற்றாகவோ எந்த தீர்வையும் எமது மக்களுக்கு பெற்றுத்தந்திருக்கவில்லை.

 

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாகவோ அன்றி அரசியல் போட்டிகளின் காரணமாகவோ நாம் எவர் மீதும் எந்த விமர்சனங்ளையும் ஒருபோதும் முன்வைப்பவர்கள் அல்ல. இத்தகைய விமர்சனங்களை நான் ஆரம்பம் தொட்டே தொடர்ச்சியாகவே முன்வைத்து வந்திருக்கிறேன்.

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்றே நாம் ஏற்றுக்கொண்டு அதை சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் எமது மக்கள் முள்;ளிவாய்க்கால் வரை இத்தனை பேரழிவுகளை சந்தித்திருக்கவேண்டிய துயரங்கள் நடந்திருக்காது என்பதையும்,…

 

அந்த ஒப்பந்தத்தை ஏற்று முன்னோக்கிய பாதையில் நாம் நடந்திருந்தால் இன்று
நடைமுறையில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் என்பதையும் நான் மீண்டும் வலியுறுத்தி கூறிவைக்க விரும்புகிறேன்.

 

நாம் எமது இலக்கு நோக்கிய வழிமுறையை மாற்றிக்கொண்டவர்களே அன்றி எமது இலட்சிய் பயணத்தை ஒருபோதும் கைவிட்டவர்கள் அல்ல.

 

ஆகவேதான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அரசியல் தொலைதூர நோக்கில் எமது வழிமுயை மாற்றிக்கொண்டாலும் நாம் தமிழ் பேசும் மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் நடைமுறை யதார்த்த வழியில் நின்று உறுதியாக உழைத்து வருகின்றோம்.

 

70களின் ஆரம்பங்களில் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைக்காக எழுச்சியுற்று உருவாகிய மாணவர் அமைப்புக்களோடு நானும் இணைந்துகொண்ட வரலாற்றை நான் நினைத்துப் பார்க்கின்றேன்.

 

அதன் பின்னர் ஈழ விடுதலை இயக்கத்திலும், ஈழ புரட்சிகர அமைப்பான ஈரோஸ் அமைப்பில் பிரதான தளச் செயற்பாட்டாளராகவும் இருந்து செயலாற்றிய அனுபவங்களை நான் எண்ணிப்பார்க்கின்றேன்.

 

தோழர் நாபா, தோழர் குண்சி ஆகியோருடன் நானும் ஒருவனாக ஈரோஸ் அமைப்பிலிருந்து வெளியேறி சென்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற எமது சுதந்திர போராட்ட இயக்கத்தை முன்னின்று ஸ்தாபித்த நாட்களை நான் எண்ணிப்பார்க்கின்றேன்.

 

அப்போது விடுதலை அமைப்புகளுக்குள் உருவாகியிருந்த உள்ளியக்க முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக பார்க்கப்பட்டு உள்ளியக்க படுகொலைகள் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில்,

 

எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குள் உருவான உள்ளியக்க முரண்பாடுகளை நேசமுரண்பாடுகளாக கருதியதோடு உள்ளியக்க படுகொலைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என்று இறுதிவரை எனது தரப்பில் உள்ளவர்கள் உறுதியாக இருந்த அந்த நாட்களையும் அதற்காக எனக்கு பக்கபலமாக நின்று ஒத்துழைத்த தோழர்களையும் நான் இந்த தேசிய எழுச்சி மகாநாட்டின்போது எண்ணிப்பார்க்கின்றேன்.

 

இதேவேளை இயக்கங்களுக்கிடையில் முரண்பாடுகள் முற்றி வெடித்து பகை உணர்வு கொண்டு ஒவ்வொரு இயக்கங்களும் அலைந்து திரிந்தபோது, இயக்கங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கான முயற்சியில் நான் அயராது உழைத்தபோது என்னுடன் கூடவே இருந்து உழைத்த தோழர்களை நான் நினைத்து பார்க்கின்றேன்.

 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குள் உருவான உட்கட்சி முரண்பாடுகளால் நாம் 1986 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் இருவேறு அணிகளாக செயற்பட்டு பின்னர் ஈழ தேசிய ஐனநாயக விடுதலை முன்னணி என்ற ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை ஸ்தாபித்திருந்தோம்.

 

ஆனாலும் எமது ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை எம்முடன் இணைந்திருந்த சிலர் தவறாக வழிநடத்தி எமது நற்பெயருக்கு களங்கம் உருவாக்கியதால் தவிர்க்க முடியாத ஒரு சூழலில்,.. 1987ல் நாம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை ஸ்தாபித்திருந்தோம்.

 

அன்றிலிருந்து இன்றுவரை 30 வருட காலமாக நாம் பலத்த சவால்களுக்கு மத்தியிலும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி கடும் பயணத்தில் நடந்து வந்திருக்கின்றோம்.

 

இந்த 30 வருட இலட்சிய பயணத்தில் எம்முடன் கூடவேயிருந்து கொல்லப்பட்ட அனைத்து தோழர்களையும் நான் என் நெஞ்சத்தில் நிறுத்தி நினைத்து பார்க்கின்றேன்.
ஒரு புகைவண்டியின் பயணம்போல் எமது கட்சியின் பயணமும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த புகைவண்டியில் ஆரம்பத்தில் ஏறி இறுதிவரை பயணிப்பவர்களும் உண்டு. இடைவழியில் ஏறி இறுதிவரை பயணிப்பவர்களும் உண்டு. ஆரம்பத்தில் ஏறி இடையில் இறங்கி மறுபடி ஏறி மறுபடி இடைவழியில் இறங்குபவர்களும் உண்டு.

 

எமது கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்வதற்கான ஜனநாயக உரிமையை நாம் என்றும் மதிக்கின்றோம். அதேபோல் விமர்சனம் சுயவிமர்சனங்களை ஏற்றுக்கொண்டு மறுபடியும் எமது கட்சியில் இணைந்து கொள்வதற்கான உரிமையும் சகலருக்கும் உண்டு. அதற்காக நாம் கதவு திறந்து வைத்திருக்கின்றோம்.

 

என்னுடன் கூடவேயிருந்து கொல்லப்பட்ட எமது தோழர்களின் இழப்பு என்பது வெட்டி வீழ்த்தப்பட்ட இறக்கையின் இழப்புக்கு நிகரானது. ஆனாலும் தனிப்பட்ட விலகல் என்பது உதிர்ந்தாலும் மறுபடி புதிதாக முளைக்கும் சிறு சிறகிற்கு ஒப்பானது.

 

இந்த இடத்தில் எனது நெஞ்சில் உரமாக உன்னத உணர்வாக எழுந்து நிற்கும் எமது தோழர்கள் குறித்த எனது எண்ணக்கருக்களையும் உங்கள் அனைவர் முன்னிலையிலும் ஒப்புவிக்கின்றேன்.

 

நாம் எழும்போது எழுவதற்கும் விழும்போது எழுந்து நடப்பதற்கும் இறுதிவரை என்னுடன் இடையறாது கூடவே நடந்துவரும் எம் பாசமிகு தோழர்களின் அர்ப்பணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உறுதிக்கும் இந்த தேசிய எழுச்சி மாநாட்டினூடாக நான் மரியாதை வழங்கி கௌரவிக்கின்றேன்.

 

அன்பான எம் உறவுகளே!
இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் நாம் தமிழகத்தில் தங்கியிருக்க நேரிட்டாலும் 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாம் இலங்கையில் கால் பதித்திருந்தோம்.
அவ்வேளையில் ஏற்கனவே செயற்பாட்டில் இருந்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்க தலைமைகளில் பத்தோடு பதினொன்றாக நாம் செயலாற்ற தொடங்கியவர்கள் அல்ல. எமது அரசியல் பயணத்தில் நாம் மக்களிடம் கற்றுக்கொண்ட அனுபவங்களை ஏற்று தீராப் பிரச்சினையாக நீடித்து வந்த அரசியல் உரிமைப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சரியான பாதையை தெரிவு செய்து தென்னிலங்கை அரசின் உறவுக்கு கரம் கொடுத்து தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து புதிய அரசியல் பாதையொன்றை நாம் திறந்து விட்டிருந்தோம்.

 

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகிய எமது வரவை அன்றைய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஒரு மாற்று அரசியல் ஜனநாயக வழி என்ற வகையில் ஏற்று எம்மை அரவணைக்க விரும்பினார்கள்.

 

இதேவேளை அப்போது அரச படையினருடன் சேர்ந்து இயங்கிய சில இயக்கங்களை போல், அவர்களில் இருந்து பிரிந்து உதிரிகளாக செயற்பட்ட சிறுசிறு தமிழ் குழுக்களை போல் எம்மையும் தமது அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றே அன்றைய தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கனவு கண்டார்கள்.

 

ஆனாலும் நாம் விதிவிலக்காக அதற்கு இடமளித்திருக்கவில்லை. 1994ம் ஆண்டு தேர்தலில் 9 ஆசனங்களை பெற்றுக் கொண்ட நாம் அரசியல் ரீதியாக முகமுயர்த்தியிருந்தோடு யாருடைய தேவைகளுக்கும் நாம் ஒருபோதும் பயன்படமாட்டோம் என்ற எமது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தோம்.

 

இதேவேளை நாம் தென்னிலங்கை அரசுகளுடன் உறவுக்கு கரம் கொடுத்து எமது மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்ற எமது கொள்கைவழி நின்றே நாம் செயலாற்றி வந்திருக்கின்றோம்.

 

நாம் எடுத்திருந்த எமது வெளிப்படையான அரசியல் நிலைப்பாடானது படையினரோடும் அரசோடும் திரை மறைவில் கூடிக்குலாவிய சில தமிழ் கட்சி தலைமைகளால் அர்த்தமற்ற வகையில் தூற்றப்பட்டது. எம் மீது அவதூறுகள் பொழியப்பட்டன. நாம் மக்களின் விரோதிகளாகவும் தென்னிலங்கை அரசுகளின் எடுபிடிகளாகவும் நாம் நேசிக்கும் எமது மக்கள் மத்தியில் எமக்கெதிரான சக்திகள் எம்மை சித்தரிக்க முற்பட்டார்கள்.

 

ஆனாலும் நாம் எமது கொள்கை வழிநின்று தென்னிலங்கை அரசுகளுடன் உறவுக்கு கரம் கொடுத்து எமது மக்களுக்காக ஆற்றிய அரசியல் அபிவிருத்தி மற்றும் உடனடி பிரச்சினை தீர்விற்கான பணிகளில் சிறு கடுகளவேனும் எம் மீது அவதூறு பரப்பியவர்கள் எவரும் ஆற்றியிருக்கவில்லை.

 

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் 09 ஆசனங்களுடன் அரசியல் பலத்தோடு இருந்த நாம் ஆதரிக்க வேண்டிய இடத்தில் அரசை ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய இடத்தில் அரசை எதிர்த்தும் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் அழுத்தம் கொடுத்தும் வந்திருந்தோம். இதேவேளை இதுவரை எந்தவொரு தென்னிலங்கை அரசுகளும் முன்வைக்காத தீர்வுத்திட்டமொன்றை உருவாக்குவதற்கும் எமது அரசியல் பலத்தை நாம் பயன்படுத்தியிருந்தோம்.

 

ஆனாலும் அன்றைய ஆளுங்கட்சி எதிர்க்கட்சி முரண்பாடுகளால் நாடாளுமன்றத்தில் வைத்து அத்தீர்வு நகல் எரிக்கப்பட்டது. இதில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தோற்றம் பெற்றிருக்கும் சில தமிழ்க் கட்சிகளும் இணைந்து நின்று தமிழ் பேசும் மக்களுக்காக கிடைத்த அரிய ஒரு அரசியல் தீர்வை திட்டமிட்டு எரிப்பதற்கு துணைபோயிருந்தன.

 

இது ஒரு மாபெரும் வரலாற்று தவறாகும். அன்றிலிருந்து இன்றுவரை சக தமிழ் கட்சி தலைமைகள் பலவும் தமிழ் பேசும் மக்களுக்காக கிடைத்த அரிய வாய்ப்புகள் அனைத்தையும் திட்டமிட்டே தவறவிட்டு வந்திருக்கின்றார்கள்.

 

இலங்கை இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸ, சந்திரிகா குமாரணதுங்க அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று நீண்டு இன்று மறுபடியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் ஆட்சிவரை தொடர்ந்து வந்திருக்கிறது.

 

இதில் எந்தவொரு ஆட்சியிலும் சரி அல்லது ஆட்சி மாற்றத்திலும் சரி கிடைத்த வாய்ப்புக்களை சக தமிழ் தலைமைகள் சரிவர பயன்படுத்தியிருக்கவில்லை என்பதே தமிழ் பேசும் மக்களின் நீடித்த துயராக தொடர்கின்றது.

 

இதனால் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வரலாற்று கடமையென்பது எமது தோள்களில் மட்டுமே சுமத்தப்பட்டிருப்பதை நாம் மறுபடியும் உணர்ந்து கொண்டோம்.

 

அரசியல் உரிமை மட்டுமன்றி அபிவிருத்தி மற்றும் அன்றாட அவலங்களுக்கான தீர்வு என அனைத்து பணிகளும் எமது தோள்களின் மீதே சுமத்தப்பட்டு வருகின்றது.
நாம் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காக அதன் ஆரம்ப கட்டமாக பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு தேவையான மேலும் அதிகாரங்களையும் விசேட அதிகாரங்களையும் பெற்று எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதையே நீண்டகாலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

 

ஏனெனில் இதுவே நடைமுறைச்சாத்தியமான வழிமுறை. எங்கிருந்து தொடங்க முடியுமோ அங்கிருந்து மட்டுமே எமது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தை தொடங்கவேண்டும்.

 

நாம் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் குறித்து வலியுறுத்தி வந்தபோது அதை அரைகுறைத் தீர்வுவென்றும் ஒன்றுக்கும் உதவாத உழுத்துப்போன தீர்வென்றும் நிராகரித்தவர்கள் இன்று நாம் கூறிய அதே வழிமுறைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை நாம் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றோம்.

 

ஆனாலும் எமது இணக்க அரசியல் வழிமுறைக்கு வந்தவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை கையாளவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை, கண்டு கொண்டாலும் கண்களை மூடி நித்திரை போல் நடிக்கிறார்கள். அவர்கள் ஆட்சிபீடம் ஏறியபின் வடக்கு மாகாணசபை வெறுமனே உறங்கிக் கிடக்கிறது. வருடந்தோறும் ஒதுக்கப்படுகின்ற நிதி எமது மக்களுக்காக பயன்படுத்தப்படாமலேயே திறைசேரிக்கு திரும்பி போகிறது.

 

மத்தியில் ஆட்சிமாற்றம் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனாலும் தமிழ்பேசும் மக்களின் வாழ்விடங்களில்; அரசியல் அதிகாரங்களில் இருப்பவர்களின் மத்தியிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதையே வரலாற்று அனுபவங்கள் வலியுறுத்தி நிற்கின்றன.

 

இதேவேளை தமிழ்பேசும் மக்கள் இதுவரை தவறான அரசியல் கட்சி தலைமைகளுக்கு வழங்கி வந்த அரசியல் பலத்தை நடைமுறை யதார்த்த வழிநின்று தமது அபிலாசைகளை வென்றெடுக்க முடிந்த சரியான அரசியல் தலைமையிடம் வழங்கவேண்டிய வரலாற்று உண்மையும் இன்று வெளிப்படையாகி வருகின்றது.

 

நாம் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட குறைந்தபட்ச அரசியல் பலத்தின் மூலம் எமது மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.
யுத்தகாலத்தில் வடக்கு கிழக்கில் இருந்து உயிர் வாழ அச்சப்பட்டு கொழும்பு நோக்கி ஓடி வந்தவர்களை கொழும்பில் தங்குமிடங்கள் அமைத்து உணவு கொடுத்து உயிர்வாழ்வதற்கான நம்பிக்கை கொடுத்து பாதுகாத்திருக்கின்றோம். யுத்த சூழலில் எமது மக்களை பட்டினிச்சாவில் நலிந்து போகவிடாமல் உணவு முதற்கொண்டு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வரை வழங்கி எமது மக்களை நாம் பாதுகாத்திருக்கின்றோம்.

 

கல்வி, சுகாதாரம், மருத்துவம், வீதி புனரமைப்பு, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து என எமது அரசியல் பலத்துக்கு ஏற்றவாறு உட்கட்டுமான பணிகளை உரிய முறையில் முன்னெடுத்திருக்கின்றோம்.
வேலைவாய்ப்பு, வீடமைப்பு, நிலமீட்பு, மீள்குடியேற்றம், வறுமை ஒழிப்பு, வாழ்வாதாரம் என எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை நாம் வழங்கியிருக்கின்றோம்.

 

ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என ஆன்மீக ஸ்தலங்களை மீளப் புனரமைத்து கொடுத்திருக்கின்றோம். முன்பள்ளிகள், பொதுநோக்கு மண்டபங்கள், என்பனவற்றை புதிதாக அமைத்து கொடுத்திருக்கின்றோம்.

 

காணாமற் போதலை இனந்தெரியாதோர் என்ற பெயரில் நடத்தப்பட்ட கடத்தல்களை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த காணாமற்;போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அமைத்து உழைத்திருக்கின்றோம்.

 

வடக்கில் யுத்தத்தின் பின்னர் 17522 ஏக்கர் நிலங்களை படையினரிடமிருந்து நாம் மீட்டுக் எமது மக்களிடம் கையளித்திருக்கின்றோம். படைமுகாமாக இருந்த கிளிநொச்சி அறிவியல் நகரை மீட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமாக மாற்றி கல்வி சமூகத்துக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றோம்.

 

சிறைகளில் வாடிய எமது இளைஞர், யுவதிகளுக்காக மறைந்த மனித உரிமைவாதியும் சட்டத்தரணிமான மகேஸ்வரி அம்மையார் மூலம் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி பலநூறு எமது உறவுகளை சிறை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம்.

 

அதன் தொடர்ச்சியாக யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12500 முன்னாள் போராளிகளை விடுவித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து பொதுவாழ்வில் இணைப்பதற்கு பெரும் பங்காற்றியிருக்கின்றோம்.

 

இத்தனைக்கும் மேலாக 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததன் பயனாக இன்று வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு 13வது திருத்தச் சட்டத்தின் ஆரம்ப கட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம்.

 

இவைகள் யாவும் நாம் உணர்ச்சி பொங்க பேசியதாலோ அன்றி அர்த்தமற்ற வெற்றுக் கோசங்களை எழுப்பியதாலோ நடந்த சாதனைகளல்ல. மாறாக எமது நடைமுறை யதார்த்தவழி நின்று தென்னிலங்கை அரசுகளின் உறவுக்கு கரம் கொடுத்து எமது மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து பெற்றவைகளேயாகும்.

 

நாம் கொண்டிருக்கும் நடைமுறை யதார்த்த மதிநுட்ப சிந்தனையோடு இணைந்து தமிழ்பேசும் மக்களின் அரசியல் பலமும் எமக்கு கிடைத்திருந்தால், நாம் இதுவரை ஆற்றிவந்த பணிகளை விடவும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதியையே இதுவரை நாம் மாற்றி எழுதியிருப்போம்.

 

நாம் எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டினால் எமது மக்கள் விமோசனமடைந்திருந்தாலும், எம் மீது அரசியல் காழ்;ப்புணர்ச்சிகள் கொண்டவர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறுகளையும் நாம் சுமந்தபடியே நடந்து வருகின்றோம்.

 

கொலை, கொள்ளை, கப்பம், லஞ்சம் மற்றும் வன்முறைகள் என்பன எமது கட்சியின் கொள்கைகள் அல்ல. இவைகளை நாம் வன்மையாக கண்டிப்பதோடு அந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே எமது கட்சியின் கொள்கையாகும்.

 

அந்த வகையில் எம்மோடு இருந்த ஒரு சில உறுப்பினர்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார்கள். சிலரை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றோம்.

 

ஆயினும் எமது கட்சியின் அரசியற் பலத்தை அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக தொடர்ச்சியாக எம்மீது சிலர் அவதூறுகளை பொழிந்து வருகின்றார்கள். ஆனாலும் இதுவரை நடந்த படுகொலைகளுக்கும் மற்றும் வன்முறைகளுக்கும் காரணமானவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

 

இதன் மூலம் எம்;மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறுகளுக்குள் இருந்து வரலாறு எம்மை மெல்ல மெல்ல இன்று விடுவித்து வருகின்றது. இனிவரும் காலமும் காத்திருந்து பல உண்மைகளை மக்கள் முன் ஒப்புவிக்கும். வெளிவராத இரகசியங்களும் இல்லை. அறியப்படாத உண்மைகளும் இல்லை.

 

நடந்து முடிந்த தேர்தல்களில் எமது கட்சிக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதாக உணரப்படுகிறது. ஆனாலும் அதற்குரிய காரணங்கள் எவையென்பது குறித்து நாம் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையொன்று எம்முன்னால் எழுந்திருக்கின்றது.

 

இதேவேளை கடந்த காலங்களிலும் இது போன்ற பின்னடைவுகளை சந்தித்திருந்த நாம் அதிலிருந்து மறுபடி நிமிர்ந்திருக்கின்றோம்.

 

ஆனாலும் எமது அரசியல் திட்டங்கள் குறித்தும், பணிகள் குறித்தும் எமது உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்தும் நாம் மக்களிடமிருந்து பெற வேண்டிய கருத்துக்களை அறிந்து வருகின்றோம். எமது கல்விச்சமூகத்தினர், சமூக அக்கறையாளர்கள், மற்றும் சமய தலைவர்களிடமிருந்தும் இருந்தும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பெற்று வருகின்றோம்.

 

நேசத்திற்குரிய எம் மக்களே!
தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஏற்கனவே உருவான தமிழ் கட்சிகளின் கூட்டு தமது வரலாற்று கடமையினை சரிவர ஆற்ற மறுத்து வருவதால் அதற்கு மாற்றீடாக நாம் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்ற புதிய ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கியிருக்கின்றோம்.

 

கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்தபோது எமது மக்களுக்கான குரல்களை எழுப்புவதை விடவும் அரசுடன் இணக்கமாக பேசியே அனைத்து பணிகளையும் எமது மக்களுக்காக ஆற்றி வந்திருக்கின்றோம்.

 

இந்நிலையில் எமது நடைமுறை யதார்த்த வழிமுறையில் தொடர்ந்தும் உறுதியாக நின்று நாம் எமது மக்களுக்காக கட்டியெழுப்பிய தேசிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞைகளை தொடர்ந்தும் காட்டியபடியே, இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கான உரிமைக்குரல்களை உரத்தபடி ஒலிப்பதென தீர்மானித்திருக்கின்றோம்.

 

ஊடக நண்பர்களை நாங்கள் நேசிக்கின்றோம். ஊடக சுதந்திரத்துக்காக மட்டும் அன்றி உண்மையின் குரல்களுக்காகவும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். இதேவேளை ஊடகங்களுக்கு இருக்க வேண்டிய கடமைகளை போல் எமது மக்களும் எமது கட்சியின் கருத்துக்களை கிராமங்கள் தோறும் ஒவ்வொரு குடிமக்களின் வீடுகள் தோறும் குடும்பங்கள் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும்.

 

கருத்து மக்களை பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். எமது கட்சியின் கருத்துக்களை மக்களிடம் எடுத்து செல்வதற்கான கட்சிக் கட்டமைப்பை நாம் இன்று உருவாக்கியிருக்கின்றோம். அதை பூரணமாக்குவதற்காக நாம் தொடர்ந்தும் உழைக்க தீர்மானித்துள்ளோம்.

 

உயிரினும் மேலான எம் இனிய தோழர்களே!

 

இதுவரை பலத்த சவால்களுக்கும் மத்தியிலும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் எமது மக்களுக்காக பெரும் பணிகளை நீங்கள் ஆற்றி வந்திருக்கிறீர்கள்.
எமது கட்சியின் வளர்ச்சிக்காக உரம் கொடுத்து எனது தோளோடு தோள் நின்று கரம் கொடுத்தும் வந்திருக்கிறீர்கள்.

 

உங்களுடன் உறவாடி எங்களுடன் கூடவேயிருந்து கொல்லப்பட்ட பலநூறு தோழர்களின் உயிரிழப்புகளை கண்டும் துணிச்சலோடும் எமது மக்கள் மத்தியில் நின்று முகமுயர்த்தி வந்திருக்கிறீர்கள்.
உங்கள் உழைப்புக்கும் அர்ப்பணங்களுக்கும் நான்; என்றும் தலைவணங்குகின்றேன்.

 

இதேவேளை எமது கட்சியின் கருத்துக்கள் எமது மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை என்ற குறைபாடுகள் விமர்சனங்களாக எம் முன்னால் எழுந்து நிற்கின்றன.
பல கிராமங்களுக்கு நீங்கள் மக்களைத்தேடி சென்றிருக்கவில்லை என்ற குறைபாடுகளும் விமர்சனங்களாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

 

ஆகவே இதுவரைகால உங்களது அர்ப்பணங்களுக்கு மரியாதை வழங்கும் நான் எமது கட்சியின் கொள்கைவழி நின்று இன்னும் அதிகமாக நீங்கள் உழைக்க முன்வரவேண்டும் என நான் விரும்புகின்றேன்.
மக்களிடம் செல்லுங்கள் மக்களின் அனுபவங்களை கற்றுக்கொள்ளுங்கள். மக்களிடம் கற்றுக்கொண்ட கருத்துக்களை இதுவரை நீங்கள் பெற்ற அனுபவங்களோடு சேர்த்து செழுமைப்படுத்தி மீண்டும் மக்களிடமே சொல்லுங்கள்.
நாம் மக்களுக்கு ஆற்றிய அபிவிருத்தி பணிகள் குறித்த விளக்கங்களை தகவல்களை மக்களிடம் இன்னும் அதிகமாக எடுத்துக் கூறுங்கள்.

 

நாம் கொண்டிருக்கும் அரசியல் திட்ட நடைமுறைகளை இதுவரை ஆற்றிய மக்கள் பணிகளையும் இனி நாம் எதை மக்களுக்காக ஆற்றப்போகின்றோம் என்ற திட்டங்களையும் மக்களிடம் விளக்கிக் கூறுங்கள்.
மக்கள் என்ற சமுத்திரத்தில் நாங்;கள் மீன்களாக வாழவேண்டும். நீரிலிருந்து மீன்களை பிரித்து விட்டால் அவை துடிதுடித்து இறந்துவிடும். நாமும் மக்களை விட்டு நீங்கி விட்டால் உயிரற்ற ஜடங்களுக்கு நிகராகவே நாமும் இருப்போம் என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
ஆகவே மக்களே எங்கள் உயிர் நாடி. மக்களிடம் செல்வதே எங்கள் உயிர் துடிப்பு. தொடர்ந்தும் மக்களிடம் செல்லுங்கள்.

 

எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை நீங்கள் அறிவீர்கள்.
ஒரு ஊசி நூலையோ, சிறு பொருளையோ மக்களிடமிருந்து அபகரிக்காதே! மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்காக மக்களிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ கைமாறு பெறுவதை விரும்பாதே.! மக்களை பலாத்காரமாக எந்த செயலிலும் ஈடுபடுத்தாதே!
மக்களிடம் கடன் வாங்கியவற்றை திருப்பிக்கொடு! மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறாதே! வன்முறைகளில் ஈடுபடாதே!
இதுபோன்ற எமது கட்சியின் கட்டாய கட்டளைகளை ஏற்று நீங்கள் நடப்பதையே நான் விரும்புகின்றேன்.

 

எம் இனிய தோழர்களே!….
ஏற்றுக்கொண்ட இலட்சியங்களுக்காக நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!
எமது வரலாற்று வாழ்விடங்களை தொடர்ந்தும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம்.
சமூகவிரோத செயற்பாடுகளை ஒழிப்பதற்காக விழிப்புக்குழுக்களை அமைத்து விழிப்புடன் செயற்படுவோம்.
எஞ்சிய எமது நிலங்களை மீட்போம்! அர்த்தமுள்ளதான மீள்குடியேற்றங்களை தொடர்ந்தும் நடத்துவோம், சிறையில் வாடும் எமது உறவுகளை மீட்டெடுக்க தொடர்ந்தும் உழைப்போம்.
13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் எமது மக்களின் உரிமைகளை வெல்வதற்கான ஒரு ஆரம்ப பாதையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
புதிய அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியலமைப்பை நாம் வரவேற்பதோடு அதற்காக நாம் சமர்ப்பித்திருக்கும் எமது மக்களுக்கான தீர்வு யோசனைகளை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம்.
தேசிய நல்லிணக்கத்திற்காக நாம் உழைக்கின்ற அதேவேளையில் எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தாயகம், மற்றும் தன்னாட்சி உரிமைகளுக்காகவும் உறுதியுடன் உழைப்போம்.
மத்தியில் கூட்டாட்சி!
மாநிலத்தில் சுயாட்சி!!
நாம் செல்லும் பயணம் வெல்லும்
என்றும் நாம் மக்களுக்காக

Related posts:


எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிர...
வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...