சட்டத் திருத்தங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Saturday, October 22nd, 2022

அமுலாக்கப்படுகின்ற சட்டத் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்பபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் செயற்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், 16 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, அரச மொழியான தமிழ் மொழியும் நிர்வாக, நீதிமன்ற மொழியாகவும் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் இன்றுவரையில் இது எந்தளவுக்கு சாத்தியமாகின்றது என்பது கேள்விக் குறியாகவே இக்கின்றது எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (21.10.2021) இடம்பெற்ற 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உiராயற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –

“எமது நாட்டு அரசியலாப்பில் தற்போது 22 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டில் கொண்டவரப்பட்ட எமது நாட்டின் இந்த அரசியலாப்பு 44 வருடங்களுக்குள் 22 தடவைகள் திருத்தங்களுக்கு முகங்கொடுத்திருக்கிறது.

இவற்றில் சில திருத்தங்கள் செயற்படுத்தப்படாவிட்டாலும், கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களைப் பார்க்கின்றபோது, திருத்தங்கள் கொண்டு வரப்படுவதில் உலகில் அதி  வேகமானதொரு நிலையையே இது காட்டுகின்றது.

இத்தகைய திருத்தங்களில் அதிகமானவை அவ்வப்போது ஆட்சிகளில் இருந்த ஆட்சியாளர்களின் அதிகாரத் தேவைகளுக்காகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றுறது.

மேலும், மக்களது நாட்டினது நன்மை கருதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் முழுமையாக செயற்படுத்தப்படாத நிலைமைகளும் காணப்படுகின்றன. இதற்கொரு உதாரணமாக, 13 ஆவது திருத்தத்தைக் குறிப்பிடலாம்.

1983ஆம் ஆண்டு ஒக்ரோம்பர் மாதம் 14ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 7வது திருத்தத்தின் மூலம் கிளிநொச்சி நிர்வாக மாவட்டம் இலங்கையின் 25வது மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்துடன் இணைந்திருந்த கிளிநொச்சி, தனி நிர்வாக மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட நிலையில், வடமராட்சிக் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் நிர்வாக மாவட்டமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தையும், காவல்த்துறை மற்றும் நீதிமன்ற விடயங்கள் சார்ந்து கிளிநொச்சி மாவட்டத்தையும் கொண்டு வாழ்ந்து வருகின்ற நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.

1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது. வடக்கு ௲ கிழக்கு மக்களின் அடிப்படை மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக மாகாண சபை முறைமையும் கொண்டவரப்பட்டது.

இன்றையநிலையில், நாட்டின் மாகாண சபைகள் அனைத்தும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத வகையில் செயற்பட்டு வருகின்றன. வடக்கு – கிழக்கில் தற்போதைய நிலையில் மாகாண சபைகள் முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.

1988ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, அரச மொழியான தமிழ் மொழியும் நிர்வாக, நீதிமன்ற மொழியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றுவரையில் இது எந்தளவுக்கு சாத்தியமாகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

அமுலாக்கப்படுகின்ற திருத்தங்கள் செயல் வடிவம் பெறுவதானது உறுதிப்படுத்தப்பட வேண்டியிருப்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இன்று இங்கே 22வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பகல் – இரவாக பெரும் முயற்சியெடுத்து, நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தத்தில் இருந்த பல விடயங்கள் இதில் மீளக் கொண்டுவரப்படுகின்றன.

நாட்டின் தற்போதைய அரசியல், சமூக, பொருளதார நிலைமைகளைக் கருத்தில் கொள்கின்றபோது, விவேகமாகவும், விரைவாகவும், தூர நோக்குடன் துணிந்து செயற்படக்கூடிய ஒரு தலைமையின் தேவையே முன்னிற்கின்றது.

அந்த வகையில், இந்தச் சந்தர்ப்பத்தில் எமது கௌரவ  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களை அத் தேவையின் செயல் வடிவமாக நாம் காண்கின்றோம். எனவே, அவரை நாம் பலப்படுத்துவதன் ஊடாக எமது நாட்டை, நாட்டு மக்களை இந்த நிலைமைகயிலிருந்து மீட்டெடுத்து, சாதகமான நிலைமையை ஏற்படுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த நிலையில், கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களதும், கௌரவ பிரதமர் திணேஸ் குணவர்தன அவர்களதும் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22 ஆவது திருத்தமானது, இந்த நாட்டின் எதிர்காலத்தை பல வழிகளிலும் மேலும் நிலைப்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பலருக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்க முடியும். அது, இயல்பானது. அனைத்துத் தரப்பினரும் இணங்குவது என்பது எந்த விடயத்திலும் முழுமையான சாத்தியமில்லை.

இத்தகைய கருத்துக்களைக் கொண்டவர்கள், தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலமாக இதனை சாத்தியப்படுத்தலாம் எனக் கருதுகின்றேன்.

13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதிலிருந்து அதனை நாம் ஏற்று வருகின்றோம். அதனைக் கொண்டு வரும்போது அதனை எதிர்த்தவர்களும், அது கொண்டுவரப்பட்டதிலிருந்து அதனை தும்புத்தடி கதை கூறி எதிர்த்தவர்களும் இன்று அதனை ஏற்கின்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அவ்வாறு 22வது அரசியலாப்பு திருத்தத்திலும் காலம் தாழ்ந்த ஞானம் கொள்ளக் காத்திராமல், அனைத்துத் தரப்பினரும் இதற்கான ஆதரவினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஏற்கனவே கிடைத்திருந்த சந்தர்ப்பங்களை எல்லாம் கோட்டைவிட்டு விட்டு, போய்விட்ட பேரூந்துக்கு கை  காட்டிக்கொண்டு இராமல், இந்த விடயத்திலாவது தங்களது சிந்தனைகளை சரிவரக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்களுக்கு நல்லது எதுவுமே நடந்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக் காத்திருக்கின்ற கைங்கரியங்களைக் கைவிட்டு, எமது மக்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்கின்ற உண்மையான, நேர்மையான, துணிச்சலான செயற்பாடுகளுக்கு இவர்கள் தயாராக வேண்டிய காலம் வெகுவாகத் தாண்டிவிட்டாலும், அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் காலமாக இக்காலத்தைக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவொன்று ஜனாதிபதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுவும் எமது மக்களுக்கு அரியதொரு சந்தர்ப்பமாகும் என்றே கருதுகின்றேன். இதன் மூலமாகவும் எமது மக்களின் அபிலாசைகளை போதியளவு வென்றெடுக்க முடியும். இந்த அமைச்சவை உப குழுவுக்கும் அனைத்துத் தரப்பினரும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வருகின்ற அதேநேரம், எமது மக்களின் பொருளாதார நிலைத்தன்மை குறித்தும் நாம் சிந்தித்து, செயற்பட்டு வருகின்றோம். எமது இந்த செயற்பாடுகளையும் குழப்புகின்ற வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்டுக் கதைகளைப் பரப்பி வருகின்றனர். பனங்காட்டு நரி  சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது. இத்தகைய அவலை நினைத்து உரலை இடிக்கின்ற செயற்பாடுகள் எமது மக்களையே தாக்கும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், இந்த நாட்டினை பலப்படுத்தி, நிலைப்படுத்துவதும், நாட்டின் அனைத்து மக்களினதும் அபிலாசைகளை சரிவரப் பூர்த்தி செய்யக்கூடியதுமான, தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை ஆராய்ந்து செலுத்தப்படுகின்ற அவதானத்துடன் கூடியதும், நாட்டின் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான ஓர் அரசியலாப்பின் தேவையினையும் வலியுறுத்த விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார். –

000

Related posts: