தலை நகரில் தமிழ் பாடசாலை போதாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 25th, 2016

நாரஹேன்பிட்டியில் சுமார் 80 வருடங்களாக இயங்கிவந்த மாவத்த அரசினர் தமிழ் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக நாரஹேன்பிட்டி, நாவல, கிருல, டொரிங்டன் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழிமூலக் கல்வியை மேற்கொள்ள இயலாதநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதைவிட, பாமன்கடை இராமகிருஷ்ணன் மகா வித்தியாலயக் காணி, இரத்மலானை இந்துக் கல்லூரி காணி சம்பந்தமாகவும் பல பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

கிருலப்பனையில் தமிழ்ப் பாடசாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டதன்  விளைவாக நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் பாமன்கடை இராமகிருஷ்ணமிஷன் மகா வித்தியாலயத்துக்கும் வருகைதரும் மாணவர்களில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளினதும் கல்வித் தரமும் பாரிய வீழ்ச்சி நிலையிலே காணப்படுகின்றது. அதேபோன்று தென் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளின் நிலையும் இதே நிலையில்தான் இருக்கின்றது. எனவே இவ்விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் தனது உடனடி அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில்

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு தவிர்ந்த தமிழ் மக்கள் பரவலாக வாழ்ந்து வரும் ஏனைய மாவட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற இயலாது என எண்ணும் நிலையில், ஏனைய விடயங்களைப் போன்றே கல்வியிலும் இப்பகுதிகள் தமிழ் அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பொதுவான ஒர் அபிப்பிராயம் இம்மாவட்டங்களிலுள்ள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இது நியாயமானதாகும். எனவே, இந்த நிலைப்பாட்டினைப் போக்கக்கூடிய ஏற்பாடுகளைக் கல்வி அமைச்சு முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றேன். இது தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையில் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்போது “இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்” எனக் கூறப்பட்டபொழுதிலும் இன்னும் அவதானம் செலுத்தப்படாத நிலையே காணப்படுகின்றது எனவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.

005

Related posts:


முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கான எரிபொருள் கிடைப்ப...
தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் - , தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விகாராதிபதியு...
பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது - அமைச்...