வட மாகாணசபை பொறுப்போடு செயற்படவில்லை கடற்றொழிலாளர்கள்  விசனம்.

Wednesday, July 13th, 2016

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல்வளத்தை அபகரிக்கும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறும், வாரத்தில் இரண்டு நாட்கள் எமது கடற்பரப்பில்  மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்கும் கோரிக்கையைக் கண்டித்தும் வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றன.

வடக்கு மாகாணசபைக்கு முன்னால் நேற்று (12) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, சங்கங்களின் தலைவர்களும், அவற்றின் அங்கத்தவர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குகொண்டிருந்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், அவர்களின் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பாவனையையும் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், இத்தொழில் நடவடிக்கையானது மத்திய அரசுக்குரிய விவகாரமாக இருந்தாலும் வடக்கு மாகாணம் என்றவகையில் தமக்கான தீர்வைப் பெற்றுத்தருவதில் வடக்கு மாகாணசபை உதவ முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு மாகாணசபைக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணசபையின் அமர்வுகள் நேற்று நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே கடற்றொழிலாளர்களின் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெற்றுள்ளது. இருந்தபோதும் வடக்கு மாகாணசபையினர் பொறுப்போடு தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும், பொறுப்பற்ற பதில்களே தமக்கு வழங்கப்பட்டது என்றும் தமது ஆதங்கத்தை போராட்டத்தில் பங்கெடுத்தோர் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அரசியல் சுயலாபங்களுக்காக அபகரித்தவர்கள், அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது அதை பொறுப்பற்றவிதமாகவும், தட்டிக்கழிக்கும் விதமாகவும் செயற்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், இவ்விடயம் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டுள்ளதால் குறித்த இவ்விடயத்தில் இலங்கை, இந்திய அரசுகளும், வடக்கு மாகாணசபையும் அக்கறைசெலுத்தி பாதிக்கப்படும் எமது மக்களுக்கு உரிய நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts: