சந்தர்ப்பங்களை ஆக்கபூர்வமானதாக உருவாக்குவதே எமது நோக்கம் – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, October 20th, 2018

“ஏக்கிய ராஜ்ய  – எக்சத் ரட்ட” என்ற சொற்களில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஒருமித்த நாடு என்றால் சிங்களத்தில் எக்சத் ரட்ட என்றே இருத்தல் வேண்டும். ஆனால் முன்மொழியப்படும் புதிய அரசியல் யாப்பில் சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றே உள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பானது ஒற்றையாட்சி என்பதே ஆகும்.

ஆக்கப்படும் சட்டங்களில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு இடையில் ஏதேனும் மாறுபாடு இருப்பின் சிங்கள மொழியே மேலோங்கி இருக்கும் என்பது அடிக்குறிப்பாக உள்ளது. இதையே நான் புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவிலே ஆட்சேபித்திருந்தேன். இதை அக்குழுவிலிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் உணர்ந்துகொண்டதாலேயே அந்த அமர்வு இம்மாதம் 25ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு இன்று கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தென்னிலங்கைக்கு சமஷ்டி கட்சி என்றும் வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி என்றும் தன்னை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இரட்டை வேடத்தை நாம் அம்பலப்படுத்தியதன் பின்னரே சில வருடங்களின் முன்பு மூன்று மொழிகளிலும் அகில இலங்கை தமிழரசுக் கட்சி என்று அது பாவித்து வருகின்றது.

இதே போன்ற ஒரு இரட்டை வேட நிலையில் தான் ஏக்கிய ராஜ்ய  என்பது ஒருமித்த நாடு தான் என்று பிழையான விளக்கத்தை தமிழரசுக்கட்சியினர் வழங்குகின்றனர். புதிய அரசியலைமைப்பு அல்லது அரசியல் சாசன திருத்தங்கள் என்பன  எப்போதாவது தான் இடம்பெறும். எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியலமைப்பு சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே சரியான மொழிபெயர்ப்பை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும், என்று விடாப்பிடியாக போராடி வருகின்றோம்.

வடமாகாணசபையின் செயல் திறன் தொடர்பில் பல்வேறு ஆக்கபூர்வமான விமர்சனங்களை நாங்கள் முன்வைத்த போது அதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்று மாகாணசபையில் 5 வருடங்களை வீணடித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

நாங்கள் எதை சொல்லிவந்தோமோ அதையே கூட்டமைப்பினர் இன்று தாங்கள் எதோ புதிதாக சொல்வது போல் கூறிவருகிறார்கள். எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது தமிழ் மக்களின் உரிமை சம்மந்தமான நாம் எடுத்த அடிப்படை கொள்கைகளில் இருந்து நாம் இன்றும் மாறவில்லை. ஆனால் அரசியல் நெளிவு சுழிவுகளுக்கூடாக பயணித்து வருகின்றோம்.

மாகாணசபை முறைமையினூடாக எமது மக்களின் அபிலாசைகளையும் அபிவிருத்தியையும் படிப்படியாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், மக்களுக்கு சரியான தெளிவான உண்மையான திட்டங்களை எப்பொழுதும் முன்வைப்பவர்களாகவே நாங்கள் இருந்து வருகின்றோம் எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெகன் உட்பட கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

unnamed (2)

unnamed
unnamed (3)

 

Related posts:

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்!  - டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...
பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தி...

குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்...
ஜனாதிபதியின் இணக்கத்தோடு 50 ஆயிரம் சூரிய மின்னுற்பத்தி வீட்டுத் திட்டம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக...