இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, October 11th, 2018

மீண்டும் இந்த நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் வரையில் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளோர் தொடர்பில் உரிய நிவாரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அத்துடன், உயிரிழந்த அனைவரதும் குடும்ப உறுப்பினர்களுக்கும், எனது அனுதாபங்களை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், இலங்கை ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைள் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றோம். இந்த நாட்டு உற்பத்திகளின் ஏற்;றுமதியைவிட இறக்குமதி மீதான ஆர்வத்தினையே கடந்த சில காலமாக ஆட்சியாளர்கள் காட்டி வருவதால், ஏற்றுமதி தொடர்பிலான வலுவை நாம் இழந்து வரவேண்டிய நிலைமை உருவாயிற்று என்றே கூற வேண்டும்.

அடுத்தது, இரு வேறு கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை கூட்டாக ஏற்றிருக்கின்ற இக்காலகட்டத்தில், எந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது? என்பது குறித்து ஒரு தெளிவற்ற நிலையே தென்படுகின்றது.

கட்சிகள் எதுவாயினும், இந்த நாட்டின் நன்மை கருதி, நாட்டின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, பொருத்தமானதொரு பொருளாதாரக் கொள்கையே முன்னெடுக்கப்படல் வேண்டும். இது ஒரு தேசிய கொள்கையாக உருவாகுமிடத்து, அதனையே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பின்பற்றக்கூடிய நிலைமை இங்கு உருவாக்கப்படல் வேண்டும். அதில், காலத்திற்கேற்ப, சூழலுக்கு ஏற்ப, சந்தை கேள்வி மற்றும் பெறுமதிக்களுக்கேற்ப நாட்டின் நன்மை கருதியதான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம்.

ஆனால், இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி வருவதால், இது காலத்திற்குக் காலம் அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் காலம் மாற்றப்படுவதால் பல்வேறு நெருக்கடி நிலைமைகளை நாடு சந்தித்து நிற்கின்றது.

இவ்வாறான கட்சிகள் கொண்டு வருகின்ற பொருளாதாரக் கொள்கைகள் அநேகமாக அடுத்த தேர்தலை நோக்கிய – அத் தேர்தலில் மக்களின் வாக்குகளை வென்றெடுக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டவையாக இருக்கின்றனவே தவிர, இந்த நாட்டுக்குப் பொருத்தமான நீடித்து, நிலைக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைகளாக இல்லாதிருப்பது, இந்த நாட்டு பொருளாதாரத் துறைக்கு ஒரு துரதிர்ஸ்டவசமான நிலைமையினையே கொண்டு தந்துக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில், தற்போதைய இந்த நாட்டின் ஆட்சி அரசியல் சார்ந்து  தளம்பல் நிலை காணப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் ஒரு கட்சி ‘2025 ஆண்டுக்கான நோக்கு’ என்றொரு பொருளாதாரக் கொள்கையினை முன்வைத்திருந்தது. இதனிடையே ஜனாதிபதி அவர்கள் ‘தேசிய பொருளாதார சபை’ ஒன்றை உருவாக்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனவே, இதில் எந்த பொருளாதாரத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது? என்பது சிக்கலான ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.

Related posts:


கடந்த காலத்தில்  தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத...
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...