எமது மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் கூட மறுக்கப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றது !

Monday, November 27th, 2017

வறுமை நிலைக்குள்ளும் சமூகப் பாதுகாப்பற்ற நிலைமைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள எமது பெண்கள் உள்ளிட்ட மக்களுக்கு வலுவூட்டக்கூடிய ஏற்பாடுகள் அவசியமாகின்றது. அதற்கென சமூக வலுவூட்டல் சமூக நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் தொடர்பான அமைச்சினை எடுத்துக் கொண்டால் எமது மக்களுக்கு தற்போது இருக்கின்ற நிவாரணமான சமுர்த்தி நிவாரணம்கூட மறுக்கப்படுகின்ற நிலைமைகளே தோன்றியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டமே விளங்குகின்றது. இங்கு 2011ஆம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் 2012ஆம் ஆண்டு சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவில்லை. அந்த வகையில் 2012ஆம் வருட இறுதியில் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள 24 கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்;கப்படவில்லை. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்த 11 ஆயிரம் பேரிலிருந்து 1600 பேருக்கான சமுர்த்தி உதவிகள் கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த 1600 பேருக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த அடிப்படையில் நிறுத்தப்பட்டன? என்பதை தனது உரையின்போது கௌரவ அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில் மேற்படி 1600 பேருக்கும் சேர்த்து சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படாதுள்ள 24 கிராம சேவையாளர்கள் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கும் என்ற வகையில் 12 ஆயிரத்து 218 குடும்பங்களுக்கு  முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதே நிலைமையே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகமாக நிலவுகின்றன. இந்த மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளை எடுத்துக் கொண்டாலும் இந்த நிலையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சமுர்த்தி நிவாரண உதவிகளைக் குறைப்;பது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும் அதனை யுத்தம் காரணமாக நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டு, இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீள முடியாதுள்ள வடக்கு – கிழக்குப் பகுதிகளில் அதனை பரீட்சித்துப் பார்க்கக் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts: