கிடைப்பதைப் பெறுவது சாணக்கியமல்ல அது சராணாகதியாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 8th, 2017

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வானது வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சித் தீர்வேயாகும் என்றும், ஆண்ட பரம்பரையினர் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்றும் உணர்ச்சி பொங்கப் பேசி ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளின் இழப்புக்களுக்கு காரணமான சுயநலத் தமிழ்த் தலைவர்கள், இன்று வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை, சமஸ்டித் தீர்வும் இல்லை ‘கடுமையான நிபந்தனைகளைக்கூட முன் வைக்காமல்  அரசாங்கம் தருவதை தீர்வாகப் பெற்றுக்கொள்வோம்’ என்று கூறுகின்றனர்.

தமது பதவிச் சுகபோகங்களுக்காகவும், அரசியல் இருப்புக்காகவும் தமிழ் மக்களை பலிகொடுத்த இவர்களின் கபடத்தனத்தை தமிழ்மக்கள் புரிந்து கொண்டால் மட்டும்போதாது. இந்தத் துரோகத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் முன் வர வேண்டும்.

போலித்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, தனி நாட்டைப் பெற்றுத் தருவதாகவும், தன்னாட்சியைப் பெற்றுத் தருவதாகவும் கூறியதை நம்பிப் போர்க்களம் போய் தமது உயிர்களை பலி கொடுத்தது தமிழ்மக்கள்தான்.

இந்தத் தலைமைகளின் குடும்பங்களோ மிகவும் பாதுகாப்பாகவும், அனைத்து சுகபோகங்களுடனும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

சமஸ்டித் தீர்வைப் பெற்றுத் தருவதாக காலத்துக்குக் காலம் காலக்கெடுக்களை கூறி தமிழ்மக்களை ஏமாற்றி வாக்குகளை சூறையாடிய சம்பந்தன் அணியினர் இன்று தமது பதவிச் சுகங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ‘கிடைப்பதைப் பெற்றுக்கொள்வோம்’ என்று கூறுவது, தமிழ்மக்களுக்கு உயரிய தீர்வுக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த அத்தனை பேருக்கும் செய்யும் அவமானமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

சம்பந்தன் இவ்வாறு கூறுவதை சில ஊது குழல்கள், சம்பந்தனை ‘சாணக்கியமுள்ள தலைமை’ என்று புகழ்பாடத் தொடங்கியுள்ளன. அது அவர்களின் வர்த்தகத் தந்திரோபாயங்களாக இருக்கலாம். ஆனால் தமிழ்மக்களைப் பொறுத்தவரை ‘கிடைப்பதைப் பெற்றுக்கொள்வோம்’ என்று கூறுவது சாணக்கியமல்ல.

அது சரணாகதி அரசியலாகும். தமிழ்த் மக்களை புதை குழிக்குள் தள்ளிவிட்டு அதன் மீது ஏறி நின்று சம்பந்தன் நடத்தும் அரசியலானது தமிழ் மக்களுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும்.

கிடைப்பதைப் பெறுவதுதான் தீர்வாக இருக்குமென்றால், தமிழ்மக்கள் இந்த மண்ணில் ரத்தமும் சதையுமாக உரிமைப் போராட்டத்தை நடத்தியிருக்கத் தேவையில்லை. ஆயிரக்கணக்கானவர்களை துடிக்கத் துடிக்கப் பறிகொடுத்திருக்கத் தேவை இல்லை.

இடம்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் மற்றும் ஈடுசெய்ய முடியாத சொத்திழப்புக்களையும் நாம் சந்தித்திருக்கத் தேவை இல்லை.

இன்று போலித்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீனுக்கு வாலையும், பாம்புக்குத் தலையையும் காட்டுவதுபோல், தமிழ் மக்களிடம் ஒன்றையும், தென் இலங்கை அரசுகளிடம் வேறொன்றையும் பேசுகின்றனர்.

தமிழ்த் தேசியத்தின் பெயராலும், ஒற்றுமையின் பெயராலும் தமிழ்மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவந்துள்ள போலித்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையின் சாயம் இப்போது வெளுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்த் தலைமைகள் அன்று தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தார்கள் அப்போது இவர்களை நம்பிப் பயனில்லை என்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட முன்வந்தார்கள்.

அதே தமிழ் தலைமைகள் இன்று இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சரியான பாதையைக் காட்டாமல், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை இளைஞர், யுவதிகளுக்குள் ஏற்படுத்தாமல், தமது இறுதிக்காலமானது, அரசியல் மற்றும் அரச மரியாதைகளுடன் அமைய வேண்டும் என்பதற்காக தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்புடையதற்ற ஒன்றை ‘தீர்வு’ என்று திணித்துவிட முயற்சிக்கின்றார்கள்.

இந்த துரோகத்திற்கு எதிராக தமிழ்மக்கள் தமது உணர்வுகளை பதிவு செய்யவேண்டும்.

Related posts: