இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜப்பானிய அரசாங்கம் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயன்படுத்துவதற்கென 07 குளிரூட்டி வாகனங்களை வழங்கியிருக்கின்றது. இதன் மூலமாக இம் மாகாணங்களில் மீனின உற்பத்தி விருத்திக்கு மேலும் பங்களிப்பினை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்

கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.-

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

சீனோர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதன் பணிகள் முறையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்திலே, மகாவலி அதிகார சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன சீனோர் நிறுவனத்தின் தயாரிப்புகளை பெற்றுள்ளன.

மேலும், கடற்றொழில் சுற்றுலாத்துறைக்குத் தேவையான படகுகள் மற்றும் கண்ணாடி இழை வகை உற்பத்தி என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், தற்போதுள்ள  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டமூலங்களின் அனைத்து திருத்தங்களையும் இணைத்து,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் சில சேர்க்கைகளையும், அகற்றல்களையும், திருத்தங்களையும் மேற்கொண்டு, புதிய சட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

எமது கடற்றொழிற்துறையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதும், அபிவிருத்தி செய்வதும், கடற்றொழிலாளர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.

இது வரைபே அன்றி முடிவல்ல. இந்த வரைபு தற்போது கடற்றொழில் துறையினர், துறைசார்ந்தவர்கள் போன்றோரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுகின்ற வகையில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது மூன்று சுற்றுகள் விடப்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட கருத்துக்களில் முக்கியமான கருத்துக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னர் இன்னுமொரு சுற்றும் விடப்படும். அதன் பின்னரே இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்.

இதனை சிலர் அறியாமை, சுயலாப அரசியல் காரணங்களுக்காகவும், தங்களது ஆதாயங்களுக்காகவும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ஐடுழு) கடற்றொழிலாளர்களின் நலன்கள் கருதிய சர்வதேச தரம்வாய்ந்த பல்வேறு விடயங்களை வலியுறுத்துகின்றது. இலங்கை இந்த சாசனத்தில் கைச்சாத்து இடா விட்டாலும், அதன் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இணைந்து ஆரம்பித்துள்ளோம். அதன்  ஒரு முக்கிய மைல் கல்லாக கடற்றொழில் ஒழுங்குமுறைகளின் பணியின் துவக்கம் என்கின்ற நிகழ்வு இம்மாதம் 08ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்தது. அதில் நானும்,  அமைச்சர் மனுச நாணாயக்கார அவர்களும், எமது இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா அவர்களும் கலந்து கொண்டிருந்தோம். கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நல்லதொரு பார்வையினை இந்த அமைப்பு கொண்டிருக்கின்றது. இதனை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஒருமித்த நாடு என்பது சமஷ்டி அல்ல : ஒற்றை ஆட்சியே - பருத்தித்துறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருங்கள் ...
21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை ...