முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் – டக்ளஸ எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 22nd, 2018

வடக்கு கிழக்கு மாகாண மக்களின் சார்பாக சுகாதார, வைத்திய சேவை வசதிகளைப் பெற்றுக் கொள்ளுவதற்காக நான் கோரிக்கைகளை முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எமது கோரிக்கையையும், அதன் நியாயங்களையும் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றித் தருவதில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டவர் ரேணுகா ஹேரத் அவர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

காலஞ்சென்ற ரேணுகா ஹேரத் அவர்கள் நுவரெலிய மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி அப்பிரதேச மக்களின் வாழ்விடங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுவதற்கும் அவர்களின் வறுமையை ஒழிப்பதிலும் கல்வி சுகாதார வசதிகள் மேம்படுத்துவதிலும் கடுமையாக உழைத்தவர் என்பதை மிகுந்த மரியாதையுடன் நாங்கள் நினைவு கூருகின்றோம்.

ஆசிரியராக தமது தொழிலை ஆரம்பித்த அவர் பின்தங்கிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக அளப்பரிய சேவையாற்றினார். இதன்மூலம் தாம் வாழ்ந்த பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ரேணுகா ஹேரத் அவர்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாரபட்சமற்று பணியாற்றினார் என்பதை அவரோடு பணியாற்றியவர்கள் என்ற வகையில் நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.

சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டது நுவரெலியா மாவட்டத்திற்கு மட்டுமல்லாது இந்த நாட்டின் பெண்களினதும் குழந்தைகளினதும் சுகாதாரத்தையும் வைத்திய சேவைகளையும் மேம்படுத்துவதற்கும் கடுமையாக உழைத்தார்.

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் அவர்களை இதே நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியிலும் அவரது அமைச்சிலும் பல தடவைகள் சந்தித்து யுத்தப் பாதிப்புக்களுடன் போதுமான சுகாதார வசதிகளும், தரமான வைத்திய சேவையும் கிடைக்காமல் அவலப்படும் மக்களின் கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றேன்.

எந்தப் பொழுதாக இருந்தாலும் இன் முகத்தோடு என்னை வரவேற்பதிலும் நான் சுமந்துவரும் எமது மக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதிலும் ஒரு முற்போக்குச் சிந்தனையோடு செயலாற்றிய அவரின் நினைவு இந் நாளில் பெருந்துயரோடு எம்மை சூழ்ந்து கொள்கின்றது.

Related posts:


மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...
கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் - பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிற...