கூட்டமைப்பின் இணக்க அரசியல்! பாலுக்கு காவல்! பூனைக்கு தோழன்!!

Wednesday, July 27th, 2016

அரசாங்கம் அமைத்திருக்கும் வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமது ஆளுமைக்குள்ளிருக்கும் வடக்கு மாகாணசபையை அரசாங்கம் மதிக்கவில்லை என்றும், தம்மோடு கலந்துரையாடி மேற்படி செயலணியை அமைக்கவில்லை என்றும் கூட்டமைப்பு தமது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது.

நான்கு மத்திய அமைச்சர்களை இணைத்தலைமையாகக் கொண்டு வட மாகாண மீள்குடியேற்ற செயலணியை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலணியானது வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும், வடக்கிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதையும், வடக்கின் எல்லையோரங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் நலன்சார்ந்த புதிய திட்டங்களை உருவாக்கும் ஆற்றல் இல்லாவிட்டாலும், அரசாங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான திட்டங்களை எவ்வாறு தமிழ் மக்களுக்காக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

கூட்டமைப்புக்கு இவற்றைச் செய்துமுடிக்கும் விருப்பமும் இல்லை, அந்த ஆற்றலும் இல்லை என்பதையே தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசுடன் உறவாடி எதிர்க்கட்சித் தலைமை பதவியையும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியையும், மாவட்டங்களின் இணைத்தலைமைப் பொறுப்புக்களையும், பின் கதவால் அரசிடம் பிற வசதிகளையும் கேட்டுப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்புக்கு,

ஏன் இவ்வாறான செயலணிகளில் பிரதிநிதித்துவத்தை அரசுடனுடனான இணக்கத்தின் மூலம் ஏன் பெற்றுக்கொள்ள முடியவில்லை? தனிமனித பெருமிதங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் இணக்க அரசியலை உரிய முறையிலும், உச்சபட்சமாகவும் பயன்படுத்துகின்ற கூட்டமைப்பினர்.

தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய திட்டங்களில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஏன் தமது பங்களிப்பை உறுதிப்படுத்த முடியாது? அவற்றைச் செய்யாமல் அரசுடன் இணக்க அரசியல் நடத்திக் கொண்டு தமது அரசியல் சுயலாபங்களுக்காக எதிர்ப்பதுபோல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் அரசு அமைத்திருக்கும் செயலணி தொடர்பான கூட்டமைப்பின் கருத்தையும், அதில் செய்யவேண்டிய திருத்தங்களையும், சேர்க்கைகளையும் செய்துகொண்டு ஆக்கபூர்வமாக செயலணியை முன்னெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறானதொரு சூழலிலேயே மீள்குடியேற்றச் செயலணி போன்ற விடயங்களை பயனுள்ள வகையில் முன்னெடுக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணக்கமாகவும், தமிழ் மக்களிடையே நின்று கொண்டு அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல நடிப்பதையும் பார்க்கும்போது, பாலுக்கு காவலாகவும், பூனைக்குத் தோழன் போலவுமே தொடர்ந்தும் நடந்துகொள்கின்றது.

Related posts:

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில...
நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவி...