காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை!

Saturday, January 27th, 2018
கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 350 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைக் கட்டிடத்தை வடக்கு மாகாண சபையின் எதிரக்காலத் தேவைகளுக்காக ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டலாக மாற்றுவதற்கு சர்வதேச ரீதியிலான விலை மனு கோரப்பட்டள்ளதாக அறிய முடிகின்றது. அந்த வகையில், வடக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் கருதி இத்தகைய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரிய விடயமாகும். அதே நேரம், மேற்படி ஹோட்டல் நிர்வாகத்தினை எதிர்காலத் தேவைகள் கருதி வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வகையில் கொண்டு வருவது மிகவும் பொருத்தமானது என்றே நான் கருதுகின்றேன். அவ்வாறான ஏற்பாட்டின் மூலமாக வடக்கு மாகாண சபையின் பணிகளை விஸ்தரிப்பு செய்வதற்கும், வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கும் பெரும் வசதியாக அமையும் என்பது எனது எதிர்ப்பார்ப்பாகும்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஐந்து மாவட்டங்களில் மூன்று மாவட்டங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வந்துள்ள நிலைமை காணப்படுகின்றது. இதில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகும். இத்தகைய வறுமை நிலைக்கு வடக்கு மாகாண சபையும் முக்கிய காரணமாகும.; இதனை இன்று எமது மக்கள் நன்குணர்ந்துள்ள நிலையில், எதிர்கால வடக்கு மாகாண சபையானது, எமது மக்களுக்கு அக்கறையுடனும், ஆளுமையுடனும், ஆற்றலுடனும் சேவை செய்கின்றவர்களது நிர்வாகத்திற்குள் வரக்கூடிய வாய்ப்புகளே காணப்படுகின்றன.
அந்த வகையில், மேற்படி ஜனாதிபதி மாளிகைக் கட்டிடத்தை வடக்கு மாகாண சபை ஆளுகையின் கீழ் கொண்டு வந்தால், அதன் உயரிய பயனை எமது மக்கள் அனுபவிப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க முடியும் என்பதால், அக் கட்டிடத்தை வடக்கு மாகாண சபை வசம் ஒப்படைக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: