எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது தவறான தமிழ் அரசியல் தலைமைகளே!

Monday, May 15th, 2017

தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களே சுயபொருளாதாரத்தில் தனித்துவத்துடன் வாழ்ந்துவந்த எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் ஆகியோருடன் இன்றையதினம் நடைபெற்ற விஷேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து அதனை கட்டம் கட்டமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதையே நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

எமது இந்தக் கோரிக்கையே நடைமுறைச்சாத்தியமான வழிமுறை என்பதை தென்னிலங்கை மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன.

எமது மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு நடைமுறையில் எவ்வாறான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியுமோ அவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

அந்தவகையில் நாம் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களுக்கு பணிபுரிவதையும் அதனூடாக மக்களது வாழ்வியலை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதையுமே நோக்காக கொண்டு இற்றைவரை அர்ப்பணிப்படன் உழைத்துவருகின்றோம்.

இதேபோன்று எதிர்காலத்திலும் மக்களுக்கான சேவைகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். இந்நிலையில் எமது கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லும் பாரிய பணிகளுக்கு அயராத பங்களிப்பை அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts: