இரணைதீவில் பாரிய கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் – அமைச்சர் டக்ளஸின் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!

Sunday, February 14th, 2021

கடலுணவு உற்பத்திக்கான கேந்திர மையமாக இரணைதீவு உருவாக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

இரணைதீவில் இன்று (14.02.2021) கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், இரணைதீவு மக்களின் வாழ்கை செழிப்படைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், கடலட்டை பண்ணையின் இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்துள்ள மேலும் பேருக்கும் பொருத்தமான பிரதேசங்களை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், கொடுவா மீன் உற்பத்திப் பண்ணைகளையும் உருவாக்கி, எண்ணெய் வளத்தின் கேந்திர நிலையமாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குவது போன்று, இலங்கையின் கடலுணவுகளுக்கான   கேந்திர நிலையமாக இரணைதீவு பிரதேசம் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் முயற்சியினால்  சுமார் 70 மில்லியன் ரூபாய் ஆரம்ப முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டைக் கிராமத்தின் முதலாவது கட்டத்தில் இரணைதீவை சேர்ந்த 83 இரணைதீவைச் சேர்ந்த பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தாராளமான சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ள கடலட்டைகளை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பதனிட்டு ஏற்றமதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்ணையின் ஊடாக, சுமார் 300 பேருக்கு நேரடியான தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 400 பேர் மறைமுகமாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் கூட்டு செயற்பாட்டுப் பொறிமுறை ஊடாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்ணைக்கான திட்டமிடலின் போது, கணிசமான பலனை இரணைதீவு மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்வில் உரையாற்றிய தனியார் முதலீட்டாளர்களான சுகத் இன்ரனாஷினல் பிறைவேற் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அரவிந்தன், குறித்த பண்ணையின் வருமானத்தில் 75 வீதமானவை இரணைதீவு மக்களையே சென்றடையும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்...
சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவ...