தமிழகத்துடனான இராஜதந்திர உறவுகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 12th, 2017

எமது அண்டைய நாடான இந்தியாவுடன் நல்லுறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு நாம் முனைகின்ற அதே வேளை,தமிழ் நாடு மாநிலத்துடனும் எமது உறவுகளை இராஜதந்திர ரீதியில் கட்டியெழுப்புவதற்கு முயலவேண்டியது இன்றியமையாததாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகப்பத்தகத்தில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது –

பூஜை வழிபாடுகளுக்கும், கோவில் தரிசனங்களுக்கும் மட்டுமல்லாது, தமிழகத்துடனான ஏனைய உறவுகள் எமக்கு பல வழிகளில் சாதகமான பலன்களையே கொண்டு தரும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையிலே எமது நாட்டு மக்களுடன் உணர்வுப்பூர்வமான உறவுகளை ஆதி காலந்தொட்டு கொண்டிருப்பவர்கள் தமிழ் நாட்டு மக்கள் என்கின்ற நிலையில் பார்க்கின்றபோது, இலங்கையின் தற்போதைய உண்மை நிலைமைகள் தொடர்பில் கருத்து ரீதியிலான கலந்துரையாடல்களை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவும்,பரஸ்பரமான புரிந்துணர்வுகளின் அடிப்படையில் சுமுகமான உறவைப் பேணுவதன் ஊடாகவும் தமிழ் நாட்டுடனான தொடர்புகள் இலங்கை இராஜதந்திர விடயங்களில் முக்கியப் பங்கினை வகிக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

அதுமட்டுமல்லாது, தரமான பல்வேறு உணவுப் பொருட்கள், இயந்திரங்கள், மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் சார்ந்த பல்வேறு வகையிலான தரமானதும்,மலிவானதுமான பொருட்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், இதுவரைக் காலத்தில் நிகழ்ந்திராத வகையில் எமது நாட்டுத் தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொள்வதற்கும்,

தமிழ் நாட்டு முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் எமது நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இங்கு அவதானத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

Related posts: