அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்!

Saturday, July 8th, 2017

ஆளும் அரசில் நாம் பங்கெடுக்காதிருந்தபோதிலும் எமது மக்களின் தேவைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் கேள்விகளை எழுப்பியும் அவற்றினூடாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம் (08) நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிபவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் பன்னெடுங்காலமாக தீர்வுகாணப்படாதிருந்த குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக உவர்நீரை நன்னீராக்கும் செயற்றிட்டத்தினூடாக மக்களுக்கான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதனூடாக வெற்றியும் கண்டுள்ளோம். இதேபோன்று நெடுந்தீவின் சாராப்பிட்டிப்பகுதியிலும் குடிநீர்த்திட்டத்தை முன்னெடுக்க நாம் முயற்சிகளை முன்னெடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக அது கைகூடாமல் போயிற்று.

ஆட்சியில் நாம் தொடர்ந்திருந்திருந்தாலோ அல்லது இந்த ஆட்சியில் நாம் தொடர்ந்திருந்தாலோ இத்திட்டம் நடைமுறைபப்படுத்தப்படக்கூடியதாக அனுகூலமான தருணங்கள் ஏற்பட்டிருக்கும். அது கைகூடாமல் போயுள்ளமையானது எமக்கு மிகுந்த வருத்தமளிக்கின்றது.

எமது முயற்சியின் பயனாகவே நெடுந்தீவில் குடிநீர்ப்பிரச்சினை மட்டுமன்றி 24 மணிநேர மின் விநியோகத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.வடமாகாணத்தில் தற்காலிக அடிப்படையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 2009 ஆம் ஆண்டுமுதல் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்ருமாறு கோரி இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

Related posts:


இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாட...
திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்காக சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!