அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019

பொதுப் போக்குவரத்துச் சேவை என்பது தொடர்பில் மேலும் முற்போக்கான ரீதியில் சிந்தித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்பதையே தற்போதுள்ள இந்நாட்டு பொதுப் போக்குவரத்துச் சேவையினாலும், அதன் பணியாளர்களாலும் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பணியாளர்களது உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதுடன், பயணிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குரிய வகையிலான பொறிமுறையே பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பிலும் தேவை என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டும்

அதைவிடுத்து தங்கத்தால் தானா வீதி அமைத்தீர்கள்? என ஒரு காலத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்துவிட்டு, இன்று அதைவிட அதிக செலவில் அதே வீதிகளை அமைத்துக் கொண்டும், ‘தங்கப் பாதை’ என திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் பொது மக்களுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு, தீவிர பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகளின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உற்பத்தி வரி தொடர்பில் கூறுகின்றபோது, சீனி உள்ளடக்கப்பட்ட குளிர்பானங்களின் வரி அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கதைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் இத்தகைய வரி விதிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு வரிகளை அதிகரிப்பதால் குளிர்பானங்களில் சீனியின் அளவு குறைக்கப்படும் என எண்ணினால் அது தவறான எண்ணமாகும் என்பதையே நாம் கடந்த காலங்களில் கண்டிருந்தோம். சீனியின் அளவைக் குறைக்காமல், அந்த குளிர்பானத்தின் விலையே அதிகரிக்கப்படும் என்பதுதான் யதார்தமான நடைமுறையாக இருக்கின்றது.

இவ்வாறு ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான’ கதைகள் பல இந்த நாட்டில் நடந்தேறி வருகின்றன. அவ்வாறின்றி, அனைத்து விடயங்களிலும் நிலைபேறு என்பது தவிர்க்கப்பட்டு வருவதானது, அனைத்து முயற்சிகளுக்குமான தோல்வியினையும், மக்களுக்கான பாதிப்புகளையுமே அதிகமாக இந்த நாட்டில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

Related posts: