மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, May 28th, 2020

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல் 10.15 முதல் 11.30 வரையில் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படது.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மறைந்த மலையகத் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அரசியல் தொண்டர்கள் ஆகியோருக்கு தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

முன்பதமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்பட்ட பின்னர், கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான காரியாலயமான சௌமிய பவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை 29ஆம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து கம்பளை கொண்டுசெல்லப்பட்டு, புஸலாவை வழியாக ரம்பொடை வேவன்டன் இல்லத்தில் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் 30ஆம் திகதி பூதவுடல் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ:சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி பிற்பகல் 1.30 அளவில் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் நோர்வூட் சௌமிய மூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இறுதி கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: