மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, December 30th, 2020

மாகாண சபைக்கான அதிகாரங்களை வலுவிழக்கச் செய்வதற்கான எதுவித முயற்சிகளிலும் தற்போதைய அரசாங்கம் ஈடுபடவில்லை. இதை நான் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றேன். சில ஊடகங்கள் தங்களுடைய செய்திகளைப் பரபரப்பாக்குவதற்காக இவ்வாறான விடயங்களை  வெளியிட்டு மக்களை குழப்புவதாகவே உணருகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழ் மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தவறான வழியில் இழுத்துச் செல்லப்பட்டு அழிந்து போனமைக்கு தங்களினால் அறிக்கையிடப்பட்ட ஊடகச் செய்திகளும் முக்கிய பங்கு வகித்திருப்பதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் தன்னுடைய 60 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றும்போது ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியிருந்தார்.

ஆனாலும் குறித்த ஊடகவியலாளர் தற்போது கடமையாற்றுகின்ற ஊடகத்திலேயே இவ்வாறான ஆதராரமற்ற  செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறுதான் சில ஊடகங்களும் சில ஊடகவியாலாளர்களும் தங்களுடைய சுயலாபங்களுக்காக மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது மாத்திரமல்ல தென்னிலங்கையில் இருக்கின்ற அதிகாரப் பகிர்விற்கு எதிரான சக்திகளையும் குழப்பி எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதன் ஊடாக தமது வியாபாரத்தினை விஸ்தரிக்க முயற்சிக்கின்றனர்..

ஊடகங்கள் என்பவை செய்திகளை சரியாக அறிக்கையிடுவதுடன் மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி – மக்களின் அபிலாசைகளை நோக்கிய பயணத்தினை வலுப்பபடுத்துவதாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

அத்துடன் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தற்போதைய அரசாங்கத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் – வேறுவேறான கருத்துக்களை கொண்டவர்கள் இணைந்திருக்கின்றார்கள்.

அமைச்சர் சரத் வீரசேகர அதிகாரப் பகிர்விற்கு எதிரான கருத்தை சொல்வதாக சொல்கின்றீர்கள். அதே அமைச்சரவையில் இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா மாகாண சபையினை முழுமையாக செயற்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.  தற்போதைய மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைவிட அதிகமான – 13 பிளஸ் வழங்க இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமரும் இதே அமைச்சரவையில் இருக்கின்றார்.

அதைவிட மாகாண சபையின் ஊடாக அரசியலில் கால் பதித்த பலர் அமைச்சரவையில் இருக்கின்றார்கள். வாசுதேவ நாணயக்கார போன்ற அரசாங்கத்தில் இருக்கின்ற இன்னும் பலர் மாகாண சபைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆக அமைச்சர் சரத் வீரசேகர என்பவர் தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை கூறிவருகின்றார். அவர் அவ்வாறு தொடர்ச்சியாக குறித்த கருத்தை வெளிப்படுத்துவதற்கு சில ஊடகங்களே வழியேற்படுத்திக் கொடுக்கின்றன என்பதை அவரே ஒரு தனிப்பட்ட சம்பாசனையில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அதுநேரம் அரசாங்கம் என்ற அடிப்படையில் தற்போதுவரை அவ்வாறான எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

அதற்காக எமது மக்கள் எனக்கு வழங்கியிருக்கின்ற அதிகார பலத்தை பயன்படுத்தி என்னால் கட்டி வளர்க்கப்பட்டிருக்கின்ற தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக எமது மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பாதுகாப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கு 3 ஆசனங்களை வழங்கியிருந்தனர். அதன்போது மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ளுவதற்கு அப்போதைய அரசாங்கம் முயற்சித்திருந்தது. அதற்கு எதிராக மக்களை அணி திரட்டிப் போராட்டங்களையோ அல்லது ஊடக அறிக்கைகளையோ வெளியிடவில்லை.

குறித்த அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த நிலையில் மாகாண சபையின் அதிகாரங்கள் மீளப் பெறக் கூடாது என்ற கருத்துடன் அரசாங்கத்தில் இருந்த 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெற்று அரசாங்கத்தின் முயற்சியை தடுத்து நிறுத்தியிருந்தேன்.

அதேபோன்று நடைமுறை பிரச்சினைகளை கையாள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெறும் தன்மையைக் கொண்டிருப்பதாக உணருகின்ற பட்சத்தில் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றேன்.

அண்மையில்கூட தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த திட்டமானது மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு மாறானதாக இருப்பதை அவதானித்த நான் அதுதொடர்பான எனது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தேன்.

எனது கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் கருத்தினை தெரிவித்ததையடுத்து சம்மந்தப்பட்ட திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை கண்டறியுமாறு அமைச்சரவை சம்மந்தப்பட்ட அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆக விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போன்று எனது மக்கள் எனக்கு வழங்கிய அதிகார பலத்தினைப் பயன்படுத்தி எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிவிருத்தியையும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வினையும் பெற்றுக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் - தோழர்கள் ம...
வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் த...
யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்த...