ஒரு தொலைபேசி அழைப்பில் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்களுக்கு கூட ஏனைய தரப்புகளால் தீர்வு காணப்படாமல் இருப்பது அவர்களது இயலாமையே – வேலணையில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 13th, 2019

ஒரு தொலைபேசி அழைப்பினூடாக மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய பிரச்சினைகளுக்குக் கூட தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாதிருப்பது அவர்களது கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் வேலணைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கண்ணகைபுரம் மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்ட பின்னரே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசு அரசுதான். நாம்தான் எமது பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண சாதுரியமான முறையில் அவைகளைக் கையாள வேண்டும்.

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான அதிகாரங்களை மக்கள் ஆற்றில் போட்டுவிட்டு குளத்தில் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த அதிகாரங்களை மக்கள் எமது கரங்களுக்கு வழங்கியிருந்தால் இன்று இத்தகைய அவலங்களை சந்தித்திருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்காது.

அழிவு யுத்தத்தால் முடங்கிக் கிடக்கும் எமது மக்களை  மீளவும் அவர்களது வாழ்வாதாரத்தில் உயர்த்த வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை நாம் முன்னெடுத்துவருகின்றோம். அதற்காக புலம்பெயர் தேச மக்களிடமும் உதவிக் கரம் நீட்டியிருக்கின்றோம்.

எமது மக்கள் புலம்பெயர் தேச மக்களைப் போன்ற வாழ்க்கை நிலையை எட்டமுடியாவிட்டாலும் அதேபோன்றதொரு வாழ்க்கை முறைக்கு மக்களைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. நம்பிக்கையுடன் மக்கள் எமக்கு வாக்களித்து அரசியல் பலத்தை தருவார்களேயானால் மக்களை இரத்தம் சிந்தவிடாது சுபீட்சமான ஒரு வாழ்க்கை முறையைப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும். அதற்கான வழிவகைகளை எதிர்காலங்களில் மக்கள் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அந்தவகையில் வேலணைப் பிரதேசத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலத்தடிநீரை பாதுகாக்க வேண்டியது அவசியமாகின்றது. அதற்கான நிலத்தடிநீரை முகாமைத்துவம் செய்வதற்காக வேலணைப்பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி நாம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தியிருந்தோம்.

அவ்வாறான திட்டங்களை இன்னும் உருவாக்குவதன் ஊடாகவே இப்பகுதியின் நன்நீர் நிலைகளை அதிகரிக்கமுடியும். அதற்கான வழிவகைகளைச் செய்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: