வவுனியா மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவை இடையே காணப்படும் முரண்பாடுகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 6th, 2019


வவுனியா மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவையாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக தீர்வு காணப்படாதிருக்கும் பிரச்சினைக்கு அடுத்த சில நாட்களில் தீர்வுகாணப்படும் என கடற்தொழில் மற்றும் நீரியல் வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(06) வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன் ஒரு அங்கமாக வவுனியா மாவட்டத்தின் தனியார் மற்றும் அரச போக்குவரத்து தரப்பிரை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது குறித்த பேருந்து நிலைய பேக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச தரப்பினரிடையே தீர்வு எட்டப்படாத நிலையில் இருந்துவரும் பிரச்சினைக்கு இருதரப்பும் விட்டுக் கொடுப்புடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் செயற்பட்டால் தீர்வு காணமுடியும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இருதரப்பினரது முரண்பாடுகளால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்ததுடன் குறித்த சேவையை மேற்கொள்ளும் இருதரப்பினரது நேர அட்டவணை தொடர்பில் உள்ள குளறுபடிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தார்.

அத்துடன் பேருந்து நிலையத்தை வினைத்திறனுடன் செயற்படுத்துவது தொடர்பாக தனியார் மற்றும் அரச பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைகாணும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (9) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள அழைப்பு விடுமாறு வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: